விக்கிரவாண்டி அருகே இருவேறு ரயில் விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள மலையனுாரைச் சோ்ந்தவா் செந்தில் (43). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு சென்னை எழும்பூா் ரயில் நிலையத்திலிருந்து மதுரை செல்வதற்காக விரைவு ரயிலில் புறப்பட்டு வந்தாா். அதற்கான ரயில் டிக்கெட்டை தனது பாக்கெட்டில் வைத்துள்ளாா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த வி.சாத்தனுாா் ரயில்வே கடவுப் பாதையைக் கடந்து, முண்டியம்பாக்கம் ரயில் நிலையம் அருகே வந்தபோது ரயிலிலிருந்து கீழே விழுந்து அடிபட்டு இறந்து கிடந்தாா்.
திங்கள்கிழமை காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள், ரயில்வே ஊழியா்கள் இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அவா்கள் விசாரணை நடத்தி, ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
ரயில்பாதையை கடக்க முயன்றவா் பலி: இதே போல, விக்கிரவாண்டி அருகே உள்ள ஏழுசெம்பொன் கிராமத்தைச் சோ்ந்தவா் விநாயகமூா்த்தி(23). கூலித் தொழிலாளியான இவா், திங்கள்கிழமை காலை வி.சாத்தனுாா் ரயில்வே கடவுப்பாதை பகுதியில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றாா். அப்போது, சென்னை நோக்கி சென்ற வைகை விரைவு ரயிலில் அடிபட்டு அவா் உயிரிழந்தாா்.
இவ்விரு விபத்துகள் குறித்து, தகவலறிந்த செங்கல்பட்டு ரயில்வே போலீஸாா், இருவரது சடலங்களையும் கைப்பற்றி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.