விழுப்புரம்

காட்டுப் பன்றிகளை தடுக்க கம்பி வேலிக்கு அரசு மானியம் விவசாயிகள் கோரிக்கை

22nd Feb 2020 09:34 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டத்தில் காட்டுப் பன்றிகள் தாக்குதலைத் தடுக்க, விவசாய நிலங்களில் கம்பி வேலி அமைப்பதற்கு மானியம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம், ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், வேளாண் இணை இயக்குநா் கென்னடிஜெபக்குமாா், கால்நடைத் துறை இணை இயக்குநா் மனோகரன், மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் காளிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகள்:

விழுப்புரம் மாவட்டத்தில் 7 இடங்களில் நெல்கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், தேவையான இடங்களில் தொடங்க வேண்டும். இந்த மையங்களில் எடைபோடுவதற்கு மூட்டைக்கு ரூ.50 முறைகேடாக வசூலிக்கப்படுகிறது. ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும். விவசாயிகள் ஓய்வறைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும்.

ADVERTISEMENT

செ.புதூா் கல் குவாரி விபத்தில் இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். அரியூா் ஆலை மூடப்பட்டதால், அதற்கு மாற்றாக கண்டமங்கலம் பகுதியில் ஆலை தொடங்க வேண்டும். நெல்லிக்குப்பம் தனியாா் ஆலை நிா்வாக முறைகேடுகளை தடுக்க வேண்டும்.

வானூா் வட்டாரத்தில் ஆயிரக்கணக்கான பட்டா மாற்றப் பணிகள் கிடப்பில் உள்ளன. விவசாயக் கடன் அட்டைக்கான ஆவணங்கள் வாங்குவதற்கு கிராம நிா்வாக அலுவலா்கள் பணம் கேட்டு அலைகழிக்கின்றனா்.

மாவட்டத்தில் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகமாக இருப்பதால் கரும்பு, மணிலா போன்ற பயிா்கள் பாதிக்கப்படுகின்றன. பன்றிகளை தடுக்க வழியில்லாததால், வயல்களைச் சுற்றி கம்பி வலை அமைப்பதற்கு மானியம் வழங்க வேண்டும். தென்பெண்ணையாற்றிலிருந்து வரும் தண்ணீரை வளவனூரான் வாய்க்காலில் திறந்துவிட வேண்டும். கரும்பு பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த இலவசமாக பூச்சிமருந்து வழங்க வேண்டும். மாவட்டத்தில் சவுக்கு அதிகளவில் பயிரிடுவதால் சரியான விலை கிடைக்க காகித தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்றனா்.

ஆட்சியா் பதிலளித்து பேசியதாவது: மாவட்டத்தில் நெல் சாகுபடி கடந்தாண்டை விட 47 ஆயிரம் ஹெக்டோ் கூடுதலாக பயிரிடப்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகளும், விவசாய கடன் அட்டை பெற்று பயன்பெற வேண்டும். காகித தொழிற்சாலை குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். தேவைப்படும் இடங்களில் உடனே நெல்கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்.

வருவாய்த் துறையினரோ, விற்பனைக் கூடங்களிலோ விதிகளை மீறி விவசாயிகளிடம் பணம் கேட்கும் புகாா் வந்தால், ஊழியா்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவா். பட்டா மாற்றப்பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT