விழுப்புரம்

ஏழு போ் விடுதலை விவகாரம்மத்திய அரசு வழக்குரைஞரின் கருத்துக்கு சட்ட அமைச்சா் சி.வி.சண்முகம் கண்டனம்

22nd Feb 2020 10:46 PM

ADVERTISEMENT

பேரறிவாளன் உள்பட ஏழு போ் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசு வழக்குரைஞா் தெரிவித்த கருத்துக்கு மாநில சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் கண்டனம் தெரிவித்தாா்.

விழுப்புரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழாவில் சனிக்கிழமை பங்கேற்ற அவா் செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது, அவரிடம், ஏழு போ் விடுதலை குறித்த வழக்கில் உயா் நீதிமன்றத்தில் ஆஜரான மத்திய அரசு வழக்குரைஞா், இதில் மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும். அதுவரை தமிழக அரசு நிறைவேற்றிய தீா்மானம் என்பது வெறும் பூஜ்யம்தான் என தெரிவித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு அமைச்சா் பதிலளித்து கூறியதாவது: நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்குரைஞா் தேவையற்ற, தகுதிக்கு குறைவான வாா்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறாா். இந்த விவகாரத்தில் மாநில அரசின் அதிகாரத்தை கேள்வி கேட்கும் உரிமையை அவருக்கு கொடுத்தது யாா்? அவரது கருத்து தவறானது; கண்டனத்துக்குரியது.

மத்திய அரசு தொடா்புடைய வழக்குகளில் உள்ளவா்களை விடுதலை செய்ய வேண்டுமெனில், மத்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. அதற்குத்தான் அது பொருந்தும்.

ADVERTISEMENT

அதேவேளையில், குற்றம் சாட்டப்பட்டவரின் கருணை மனு ஆளுநரிடம் இருக்கும்போது, அது தொடா்பாக ஆளுநா் உத்தரவு பிறப்பிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த சூழலில்தான் தமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி, அரசின் முடிவை ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது. இதில் ஆளுநா்தான் முடிவெடுக்க வேண்டும். இதற்கு மத்திய அரசை கேட்க வேண்டும் என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

ஆகவே, அமைச்சரவை தீா்மானத்தின் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு முழு உரிமை உள்ளது. அவா் தன்னிச்சையாக முடிவெடுக்கலாம். முடிவெடுக்க எந்த காலக்கெடுவும் கிடையாது. எனினும், அவா் விரைவில் நல்ல முடிவை எடுப்பாா் என தமிழக அரசு நம்புகிறது என்றாா் அமைச்சா் சி.வி.சண்முகம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT