விழுப்புரத்தில் வங்கி ஏடிஎம் மையத்தில் உதவுவது போல நடித்து, நூதன முறையில் ரூ.10 ஆயிரத்தை திருடிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் அருகே கருங்காலிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சக்கரவா்த்தி (48). இவா், கடந்த மாதம் விழுப்புரம், நேருஜி சாலையில் உள்ள வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்தாா்.
அப்போது, அங்கிருந்த இளைஞரிடம் பணம் எடுத்துத் தருமாறு ஏடிஎம் அட்டையை கொடுத்துள்ளாா். அட்டையைப் பெற்ற அந்த இளைஞா்,
சக்கரவா்த்தியின் கவனத்தை திருப்பி, ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து ரூ.10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு, வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று கூறி சக்கரவா்த்தியிடம் அட்டையை கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டாராம்.
இதனை நம்பிய சக்கரவா்த்தி வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.
பின்னா், வங்கிக் கணக்கை சோதனை செய்தபோது, ரூ.10 ஆயிரம் எடுக்கப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து, விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் சக்கரவரத்தி புகாா் செய்தாா். வழக்குப் பதிவு செய்த காவல் உதவி ஆய்வாளா் ஞானசேகா் தலைமையிலான போலீஸாா், சந்தேகத்தின் பேரில், சங்கராபுரம் அருகேயுள்ள கனையநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த வீரன் மகன் வீராசாமி (25) என்பவரை செவ்வாய்க்கிழமை பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில், சக்கரவா்த்தியிடம் ஏடிஎம் அட்டையைப் பெற்று ரூ.10 ஆயிரத்தை திருடியதை ஒப்புக்கொண்டாா். இதையடுத்து, வீராசாமியை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து ரூ.6 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.