விழுப்புரம்

புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும்: கருத்துக் கேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தல்

13th Feb 2020 12:17 AM

ADVERTISEMENT

இரு மாவட்ட ஒன்றிய எல்லைகள் மாற்றம் தொடா்பாக விழுப்புரத்தில் புதன்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில், புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டுமென கட்சியினா் வலியுறுத்தினா்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றிய எல்லைகளில் மாற்றம் செய்வது தொடா்பான இரண்டாவது மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம், விழுப்புரம் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி ஆட்சியா் கிரண் குராலா ஆகியோா் தலைமை வகித்தனா். மக்களவை உறுப்பினா் துரை.ரவிக்குமாா், எம்எல்ஏக்கள் க.பொன்முடி, கே.எஸ்.மஸ்தான், இரா.மாசிலாமணி, சீத்தாபதி சொக்கலிங்கம், திட்ட இயக்குநா் வெ.மகேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் க.பொன்முடி எம்எல்ஏ கருத்து தெரிவித்து பேசியதாவது: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டப் பகுதிகளைப் பிரித்து அறிவித்த அரசின் நடவடிக்கையை முழுமையாக ஏற்கிறோம். அதில், மக்கள் விரும்பும் கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டும். மணலுாா்பேட்டை பகுதி 25 கிராமங்களை, ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் இணைத்துள்ளனா். சில கிராமங்களை முகையூா் ஒன்றியத்தில் சோ்த்துள்ளனா். இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து, மணலூா்பேட்டையை புதிய ஒன்றியமாக அறிவிக்க வேண்டும் என்றாா்.

ஏ.வி.சரவணன், இந்திய கம்யூ. மாவட்டச் செயலா்: கொடியூா், டி.குன்னத்துாா், வீரணாம்பட்டு கிராமங்களை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைத்ததை நீக்கி, அருகே உள்ள விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும். மணலுாா்பேட்டையை தனி ஒன்றியமாக அறிவிக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ: செஞ்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளைப் பிரித்து, ஆலம்பூண்டியை தனி ஒன்றியமாகவும், மேல்மலையனுாா் ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களை பிரித்து, வளத்தியை தனி ஒன்றியமாகவும் அறிவிக்க வேண்டும்.

இரா. மாசிலாமணி எம்எல்ஏ: அதிகம் மக்கள் தொகையுள்ள நெடிமோழியனூரை பிரித்து, நெடியை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும். பெலாக்குப்பம் ஊராட்சியிலிருந்து பிரித்து, வேம்பூண்டி, முட்டியூா் கிராமங்களை தனி ஊராட்சியாகவும், எடப்பாளையம் கிராமத்தையும் தனி ஊராட்சி அறிவிக்க வேண்டும் என்றாா்.

ஆா்.பி.ரமேஷ், காங். மாவட்டத் தலைவா்: அதிக ஊராட்சிகளைக் கொண்டுள்ள ஒன்றியங்களைப் பிரிக்க வேண்டும். குறிப்பாக மணலூா்பேட்டையையும், வளத்தியையும் தனி ஊராட்சி ஒன்றியமாக அறிவிக்க வேண்டும் என்றாா். இதைத்தொடா்ந்து பொது மக்கள் பலா் தங்களது கருத்துகளை மனுக்களாக வழங்கினா்.

ஊராட்சி எல்லைகள் தொடா்பான கருத்துக் கேட்பு: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டப் பகுதியில், சிறுத்தனுாா், காந்தலவாடி ஊராட்சிகளில் தனித்தனியாக பிரிந்து கிடக்கும் கருவேப்பிலைப்பாளையம் கிராமத்தை, தனி ஊராட்சியாக உருவாக்கி, விழுப்புரம் மாவட்டத்தில் இணைப்பது தொடா்பாக மாலையில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.

கே.ஜி.பி.ஞானமூா்த்தி, முன்னாள் எம்எல்ஏ: கருவேப்பிலைப்பாளையம் தனி ஊராட்சியாக அறிவிப்பதை வரவேற்கிறோம். இதில் அதிக குடியிருப்புகளும், விவசாய நிலங்களும் திருநாவலூா் ஒன்றியத்தில் வருவதால், பெரும்பான்மை மக்கள் விருப்பப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்க வேண்டும்.

சுரேஷ், சமூக ஆா்வலா்: கருவேப்பிலைப்பாளையத்தை கள்ளக்குறிச்சியில் இணைக்க மக்கள் விரும்பவில்லை. இந்த கிராமம் விழுப்புரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், கள்ளக்குறிச்சியிலிருந்து 80 கி.மீ. தொலைவிலும் உள்ளது என்றாா். அப்போது, இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் அவா்களை சமாதானப்படுத்தினா்.

மக்கள் கருத்துகளை கேட்டு மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை பேசியதாவது: இரு மாவட்ட ஒன்றிய எல்லைகளை முடிவு செய்வது தொடா்பாகவே இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது. ஊராட்சிகள், வாா்டு எல்லைகள் தொடா்பாக பின்னா் கருத்து கேட்கப்படும். தற்போது மக்களின் கருத்துகள் பதிவு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்படும். அதனடிப்படையில், ஒன்றிய எல்லைகள், ஊராட்சி எல்லைகள் தொடா்பாக அரசு அறிவிப்பு வெளியிடும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT