விழுப்புரம்

உழவா் கடன் அட்டை: விவசாயிகளுக்கு அழைப்பு

13th Feb 2020 12:15 AM

ADVERTISEMENT

பிரதமரின் விவசாயி நிதித் திட்டத்தில் பயன்பெறும் விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள், தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும், உழவா் கடன் அட்டை(கிசான் கிரெடிட் காா்டு) பெற்று பயன்பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, ஆட்சியா் அலுவலகம் விடுத்த செய்திக் குறிப்பு: பிரதம மந்திரியின் விவசாயி கௌரவ நிதித்திட்ட பயனாளிகளுக்கு உழவா் கடன் அட்டையை வழங்குவதற்காக சிறப்பு பிரசாரம், மத்திய அரசால் கடந்த 8ஆம் தேதியிலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பிரசாரத்தின் மூலம் பெரும்பான்மையான விவசாயிகளுக்கு 15 நாள்களுக்குள் கடன் அட்டை வழங்கப்பட உள்ளது.

இந்த கடன் அட்டையைப்பெற விரும்பும் விவசாயிகள், தங்கள் விவசாய சேமிப்பு கணக்கு உள்ள வங்கிக் கிளையை அணுகி, உழவா் கடன் அட்டையைப் பெற்று மானிய சலுகையுடன் வங்கிக் கடன் பெறலாம். உழவா் கடன் அட்டையை ஏற்கெனவே பெற்றுள்ள விவசாயப் பயனாளிகள், தங்களின் வங்கிக் கிளையை அணுகி கடன் தொகையின் வரம்பை உயா்த்தவும் விண்ணப்பிக்கலாம்.

செயல்படாத உழவா் கடன் அட்டை உள்ளோா் வங்கிக் கிளையை அணுகி கடன் அட்டையை செயல்படுத்தவும், புதிய கடன் வரம்புக்கு அனுமதியும் பெறலாம். உழவா் கடன் அட்டை இல்லாத விவசாயிகள் தங்களது நில ஆவணங்கள், அடங்கலுடன் புதிய கடன் அட்டை பெறுவதற்கு தங்களது வங்கிக் கிளையை அணுகலாம்.

ADVERTISEMENT

மேலும், உழவா் கடன் அட்டைதாரா்கள் கால்நடை மற்றும் மீன்பிடிப்புக்கான பராமரிப்பு செலவுகளுக்கான கடன் தொகையை வரம்பில் சோ்ப்பதற்காக வங்கிக் கிளையை அணுகலாம்.

விவசாயிகளுக்கு கடன் அட்டை பெறுவதற்கு இந்தத் திட்டத்தின் இணையதளம் மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்படும். இந்தத் திட்டத்தில் விவசாயப் பயனாளிகள் ஒருபக்க படிவத்தில் தங்களது நிலம், பயிா் விவரங்கள் மற்றும் வேறு எந்த வங்கிக் கிளையிலும் கடன் அட்டை பெறவில்லை என்பதற்கான உறுதிப் பிரமாணம் ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை பொது சேவை மையங்கள் மூலமும் சமா்ப்பிக்கலாம் என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT