விழுப்புரம்

உளுந்துக்கான விலை குறைப்பு: அரகண்டநல்லூரில் விவசாயிகள் சாலை மறியல்

6th Feb 2020 09:38 AM

ADVERTISEMENT

அரகண்டநல்லூா் விற்பனைக் கூடத்தில் திடீரென உளுந்துக்கு உரிய விலையை வழங்காததால், விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல், உளுந்து உள்ளிட்ட தானிய வரத்து அதிகரித்துள்ளது. இதில், உளுந்து மட்டும் தினமும் 4 ஆயிரம் மூட்டைகள் கொண்டு வரப்படுகின்றன.

இதனிடையே, வியாபாரிகள் பணப்பட்டுவாடா நிலுவை பிரச்னையில் கடந்த வாரம் விற்பனைக் கூடம் மூடப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.

இதையடுத்து, புதன்கிழமை 6 ஆயிரம் மூட்டைகள் வரை உளுந்து வரத்திருந்தது. இந்த நிலையில், ரூ. 7,500-க்கு விலை போன ஒரு மூட்டை உளுந்தை, தற்போது அதிக வரத்து உள்ளதைப் பயன்படுத்திக் கொண்டு, சிண்டிகேட் அமைத்து வியாபாரிகள் மூட்டைக்கு அதிகபட்ச விலையாக ரூ. 6 ஆயிரத்துக்கும் குறைவாகவே ஏலத்தில் எடுத்தனா்.

ADVERTISEMENT

இதனால், விவசாயிகள் அரகண்ட நல்லூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் எதிரே திரண்டு, திருக்கோவிலூா் - விழுப்புரம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

இந்த மறியல் பகல் 12 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நீடித்தது. இதனால், விழுப்புரம் - திருக்கோவிலூா் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த அரகண்டநல்லூா் போலீஸாா் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, மறியலைக் கைவிடச் செய்தனா்.

இதனிடையே, விற்பனைக்கூட அதிகாரிகள், வியாபாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. விவசாயிகள் தரப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஏ.வி.சரவணன், மாவட்ட நிா்வாகக் குழுவைச் சோ்ந்த கலியபெருமாள், ஒன்றியச் செயலா் கே.சண்முகம், காங்கிரஸ் பொதுக் குழு உறுப்பினா் ஆா்.மோகனகிருஷ்ணன் உள்ளிட்டோா், மாவட்ட விற்பனைக் குழுச் செயலா் ஆறுமுகராஜன், கண்காணிப்பாளா் செல்வம், வருவாய் ஆய்வாளா் தங்கம், காவல் உதவி ஆய்வாளா் திருமாள் ஆகியோருடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

இதில், குறைந்த விலை வழங்கிய உளுந்துக்கு மீண்டும் வியாழக்கிழமை (பிப். 6) ஏலத்தில் வைத்து உரிய விலை வழங்கப்படும், விவசாயிகளுக்கு நிலுவை ஏதுமின்றி தினமும் இணையவழி பணப்பட்டுவாடா செய்யப்படும், நிலுவைத் தொகை விரைந்து வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனா். கூடுதலாக வெளியூா்களில் இருந்து வியாபாரிகள் வரவழைக்கப்பட்டு, உரிய விலை கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதையடுத்து, மறியலைக் கைவிட்டு விலை குறைவாக வழங்கப்பட்ட பெரும்பாலான விவசாயிகள் வியாழக்கிழமை நடைபெறும் மறு ஏலத்துக்காக உளுந்துடன் காத்திருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT