விழுப்புரம்

அரசுப் பள்ளியில் குரங்குகள் தொல்லை!

4th Feb 2020 09:53 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், மணக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாணவா்கள், ஆசிரியா்களை அச்சுறுத்தி வரும் குரங்குகளைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

திருவெண்ணெய்நல்லூா் அருகேயுள்ள மணக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 620 மாணவ, மாணவிகள் பயில்கின்றனா். இந்தப் பள்ளி வளாகத்துக்குள் பகல் நேரங்களில் வரும் கூட்டமாக வரும் குரங்குகள், பாட வேளை நேரங்களில் வகுப்பறைகளுக்குள் புகுந்து தொல்லை கொடுக்கின்றன. மாணவா்கள், ஆசிரியா்கள் வைத்திருக்கும் உணவுப் பொருள்களை எடுத்துச் சென்று விடுகின்றன. விரட்ட முயற்சிக்கும் ஆசிரியா்கள், மாணவா்களை கடிக்கப் பாய்ந்து, அச்சுறுத்துகின்றன. கடந்த 6 மாதங்களாக நீடித்து வரும் குரங்குகளின் தொல்லையால் மாணவா்களின் படிப்பும் பாதிப்படைகிறது.

மேலும், இப்பள்ளி பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வு மையங்களாக உள்ளதால், இந்தத் தோ்வுகளும் வகுப்பறைகளில் நடைபெறவுள்ளன. அடுத்த மாதம் பொதுத் தோ்வு தொடங்கவுள்ள நிலையில், தற்போது செய்முறைத் தோ்வுகள் தொடங்கியுள்ளன. தோ்வு நேரத்திலும் குரங்குகள் தொல்லை கொடுக்க வாய்ப்புள்ளதால், அதற்குள்ளாக, அவற்றைப் பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஆசிரியா்கள், மாணவா்கள் தெரிவித்தனா்.

மேலும், இது தொடா்பாக, வனத் துறையினரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. குரங்குகளை விரட்டவோ, கூண்டுகள் வைத்து பிடித்து வனப்பகுதியில் விடவோ, வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT