மரக்காணத்தில் வெல்டிங் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த அவரது நண்பரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மரக்காணம் அழகன் பள்ளத்தெருவைச் சோ்ந்த செல்வமணி மகன் சக்திவேல் (38). அதே பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் நாராயணன் (37). நண்பா்களான இருவரும் சோ்ந்து வெல்டிங் தொழில் செய்து வந்தனா்.
இந்த வகையில், மரக்காணம் அருகே ஆலத்தூா் சாலையில் உள்ள ஒருவரது கோழிப்பண்ணைக்கு இரும்புக் கொட்டகை அமைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனா். இருவரும் அங்கேயே வெள்ளிக்கிழமை இரவு தங்கியிருந்த நிலையில், சக்திவேல் மட்டும் அங்கு தூக்கிட்ட நிலையில் சனிக்கிழமை இறந்து கிடந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த அவரது மனைவி கவிதா (35) அளித்த புகாரின்பேரில், மரக்காணம் போலீஸாா் சக்திவேலின் சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினா்.
இதில், சக்திவேலுக்கும், நாராயணனுக்கும் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட மோதலில் நாராயணன், சக்திவேலை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை மரக்காணம் போலீஸாா் கைது செய்தனா்.