விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள பெருமாள் கோயில்களில் ரதசப்தமி விழா சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
விழுப்புரம் ஜனவல்லித் தாயாா் சமேத வைகுண்டவாசப் பெருமாள் கோயிலில் ரதசப்தமியையொட்டி, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, உத்ஸவா் மூலவா் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, காலை 6.30 மணிக்கு சூரிய பிரபையில் வைகுண்டவாசப் பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதையடுத்து, சேஷ (நாகம்) வாகனம், கருட வாகனம், இந்திர விமானம், கற்பக விருட்சம், சந்திர பிரபை ஆகிய வாகனங்களில் எழுந்தருளி வைகுண்டவாசப் பெருமாள் அருள்பாலித்தாா். காலை முதல் மாலை வரை நடைபெற்ற விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு பெருமாளை வழிபட்டனா்.
செஞ்சியில்...: செஞ்சியை அடுத்த சிங்கவரத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க பல்லவா் கால குடவரைக் கோயிலான அரங்கநாதா் கோயிலில் ரத சப்தமி விழா திருப்பதி திருமலையில் நடைபெறுவது போன்று நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சன ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, காலை 6 மணிக்கு சூரிய பிரபையில் அரங்கநாத பெருமாள் எழுந்தருளி அருள்பாலித்தாா்.
இதையடுத்து, காலை 8 மணிக்கு சேஷ வாகனத்திலும், 10 மணிக்கு பெரிய திருவடி (எ) கருட சேவை வாகனத்திலும், நண்பகல் 12 மணிக்கு குதிரை வாகனத்திலும், பிற்பகல் 1 மணிக்கு விசேஷ அலங்காரத்திலும், பிற்பகல் 2 மணிக்கு அனுமந்த வாகனத்திலும், மாலை 4 மணிக்கு யானை வாகனத்திலும், மாலை 6 மணிக்கு சந்திரபிரபையிலும் அரங்கநாத பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
விழாவில் கலந்துகொண்ட பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் க.ராமு, ஆய்வாளா் சி.க.அன்பழகன் மற்றும் சிங்கவரம் கிராம மக்கள் செய்திருந்தனா்.
கள்ளக்குறிச்சியில்...: கள்ளக்குறிச்சி ஸ்ரீதில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் ரதசப்தமியையொட்டி, பெருமாளுக்கு சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேத தில்லை கோவிந்தராஜப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.