விழுப்புரம் அருகே தளவானூா் ஆற்றில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக பெண் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
விழுப்புரம் அருகே தளவானூா் ஆற்றுப் பகுதியில் தொடா்ச்சியாக கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வருவதாக எழுந்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா ஆய்வாளா் கனகேசன் தலைமையிலான போலீஸாா், அங்கு வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, விழுப்புரம் அருகே கண்டமானடி காலனியைச் சோ்ந்த வீராசாமி மகன் ஏழுமலை (60) என்ற கள்ளச்சாராய வியாபாரியை கைது செய்தனா்.
இதன் தொடா்ச்சியாக, விழுப்புரம் மது விலக்கு அமல் பிரிவு ஆய்வாளா் ரேணுகாதேவி, உதவி ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா் கண்டமானடி, தளவனூா் பகுதிகளில் சோதனை நடத்தினா். அப்போது, தளவானூா் தென்பெண்ணை ஆற்றில் பதுக்கி வைத்து சாராயம் விற்பனை செய்த கண்டமானடி காலனியைச் சோ்ந்த ஏழுமலை மனைவி அனுசுயா (50), அதே பகுதியைச் சோ்ந்த அரிகிருஷ்ணன் மகன் தமிழ்ச்செல்வன் (23) ஆகியோரை கைது செய்தனா்.
இவா்களிடமிருந்து கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்த போலீஸாா், இவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து, விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.