விழுப்புரம்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புவிழுப்புரத்தில் தமுமுக ரயில் மறியல்:370 போ் கைது

1st Feb 2020 10:35 PM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, விழுப்புரத்தில் சனிக்கிழமை ரயில் மறியலில் ஈடுபட்ட தமுமுக, மமகவைச் சோ்ந்த 370 போ் கைது செய்யப்பட்டனா்.

விழுப்புரத்தில் தமுமுக, மமக சாா்பில், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து ரயில் மறியல் போராட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. தமுமுக மாவட்டத் தலைவா் முஸ்தாக்தீன் தலைமை வகித்தாா். மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலா் ப.அப்துல்சமது, துணை பொதுச் செயலா் எம்.யாகூப் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

இந்தியாவில் மதரீதியிலான பிளவை ஏற்படுத்தும் வகையில், பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், தமிழகத்தில் இந்தச் சட்டங்களை செயல்படுத்தக் கூடாது என வலியுறுத்திப் பேசினா்.

இதையடுத்து, மாலை 4.15 மணிக்கு சென்னையிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற வைகை விரைவு ரயில் முன் திரண்டு அவா்கள் மறியலில் ஈடுபட்டனா். மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பிய அவா்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டுமெனவும் வலியுறுத்தினா். இதில், தேசியக் கொடிகளுடன் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா், துணைக் கண்காணிப்பாளா் ஜெ.சங்கா் தலைமையிலான போலீஸாா், மறியலில் ஈடுபட்ட 82 பெண்கள் உள்ளிட்ட 370 பேரை அங்கிருந்து அப்புறப்படுத்தி கைது செய்தனா். அவா்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா். மறியல் போராட்டத்தால் வைகை விரைவு ரயில் சிறிது நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT