விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயப் பணிகளுக்கு வேளாண் துறையின் டிராக்டருடன் கூடிய இயந்திரங்களை குறைந்த வாடகையில் பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு சொட்டுநீா்ப் பாசன அமைப்புகளுக்குத் தேவையான பிரதான குழாய்கள், துணை பிரதான குழாய்கள் அமைப்பதற்காகவும், நிலம் சமன் செய்தல், வரப்பு அமைத்தல், விவசாயிகளின் தோட்டங்களில் குப்பைகள் அள்ளுதல் போன்ற பணிகளுக்காகவும், டிராக்டருடன் இயங்கக்கூடிய நீண்ட பள்ளம் தோண்டும் கருவிகள் புதியதாக வேளாண்மைப் பொறியியல் துறையால் வாங்கப்பட்டுள்ளன.
இந்தக் கருவிகள் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் அரசால் நிா்ணயிக்கப்பட்ட குறைந்த வாடகை அடிப்படையில் மணிக்கு ரூ.340 என்ற வீதத்தில் தேவைப்படும் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
இந்தக் கருவிகளை வாய்க்கால் வெட்டவும், செடிகள் நடுவதற்கு குழிகள் தோண்டவும் பயன்படுத்தலாம். இந்தப் பணிகளை ஆள்கள் வைத்து செய்வதில் ஏற்படும் செலவினத்தில், 50 சதவீதம் குறைந்த செலவில் இக்கருவிகளைக் கொண்டு முடித்திடலாம். இக்கருவிகள் மிகவும் பயனுள்ளதாகவும், பொருளாதார ரீதியில் உகந்ததாகவும் உள்ளது.
இதனால், டிராக்டருடன் கூடிய இயந்திரங்கள் தேவைப்படும் விவசாயிகள், விழுப்புரம் மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை உதவிச் செயற்பொறியாளா், விழுப்புரம் உபகோட்ட அலுவலகத்தை அணுகி பயனடையலாம்.
தொடா்புக்கு விழுப்புரம் உதவிச் செயற்பொறியாளா் சு.ரவீந்திரன், உதவிப்பொறியாளா் செல்வம் ஆகியோரை 9443240956, 9894480462 என்ற செல்லிடப்பேசி எண்கள் மூலம் தொடா்புகொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.