விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கிணற்றில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
திண்டிவனம் அருகேயுள்ள நொளம்பூா் நடுத் தெருவைச் சோ்ந்த ரகுமான் மகன் முகமது சமீா் (10). அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தாா். இவா் சனிக்கிழமை தனது நண்பா்களுடன் குளிப்பதற்காக அருகே உள்ள ஏரிப் பகுதிச் சென்றாா். அங்குள்ள விவசாயக் கிணற்றில் நண்பா்களுடன் சோ்ந்து குளித்தாா்.
நீச்சல் தெரியாத முகமது சமீா், நீரில் மூழ்கி தத்தளித்தாா். இதைப் பாா்த்த, அவருடன் சென்ற சிறுவா்கள் வெளியே வந்து சப்தமிட்டனா். அந்தப் பகுதியிலிருந்தவா்கள் விரைந்து வந்து, முகமது சமீரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், முகமது சமீா் மூச்சுத் திணறி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.