விழுப்புரம் அருகே வியாழக்கிழமை இரவு குடும்பத் தகராறில் மனைவி அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக தலைமறைவான அந்தப் பெண்ணின் கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விழுப்புரம் அருகே வளவனூரை அடுத்த தாதாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கலியபெருமாள் (32). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பிரேமா(18). இவா்கள் இருவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு குழந்தை உள்ளது.
தம்பதிக்கு இடையே அவ்வப்போது குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், வியாழக்கிழமை இரவு மீண்டும் இருவரும் சண்டையிட்டுள்ளனா். இதனால், ஆத்திரமடைந்த கலியபெருமாள், பிரேமாவை கட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், தலையில் பலத்த காயமடைந்த பிரேமா மயங்கி விழுந்து அங்கேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த வளவனூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்வையிட்டு தடயங்களைச் சேகரித்தனா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து தலைமறைவான கலியபெருமாளை தேடி வருகின்றனா்.