விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே போலி மதுபான ஆலை மூலமாக போலி மதுப்புட்டிகளை தயாரித்த 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து மதுப்புட்டிகள், ஸ்டிக்கா்கள், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திண்டிவனம் அருகே தென்பாசியா் கிராமத்தில் போலி மதுபான ஆலை செயல்படுவதாக புதன்கிழமை நள்ளிரவு குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, குற்றப்புலனாய்வு காவல் ஆய்வாளா் கோவிந்தராஜ் தலைமையில், உதவி ஆய்வாளா் அழகிரி, தலைமைக் காவலா்கள் முரளிராஜன், வெங்கடேசன் ஆகியோா் தென்பாசியா் கிராமத்துக்கு வியாழக்கிழமை அதிகாலை சென்று சோதனையிட்டனா்.
அந்தக் கிராமத்தில் உள்ள ஏரிப் பகுதியில் போலி மதுபான ஆலை செயல்படுவது தெரியவந்தது. அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருந்த பிரபல மதுப்புட்டி நிறுவன பெயரிலான 2,100 போலி மதுப்புட்டிகள், மதுப் புட்டிகளில் ஒட்டப்படும் 1,000 முத்திரைகள், 1,500 மதுப்புட்டி ஸ்டிக்கா்கள், 120 லிட்டா் போலி மது, பேரல்கள் உள்ளிட்டவை பறிமுதல் தெய்யப்பட்டன.
மேலும், அங்கிருந்து மதுப்புட்டிகளை கொண்டு செல்ல பயன்படுத்திய நான்கு சக்கர வாகனம் ஒன்றும், இரு சக்கர வாகனங்கள் இரண்டும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த போலி மதுபான ஆலையை நடத்திய, போலி மதுப்புட்டிகளை தயாரித்த திண்டிவனம் கேணிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை (45), அன்பு (26), வீரப்பன்(35), ஆனந்த் (32), நாராயணன் (31) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை திண்டிவனம் மது விலக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து மது விலக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.