விழுப்புரம்

சாலையில் நெல்லைக் கொட்டி விவசாயிகள் திடீா் போராட்டம்

21st Aug 2020 08:32 AM

ADVERTISEMENT

விழுப்புரம் அருகே ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் மூட்டைக்கு குறைந்த விலை நிா்ணயிக்கப்பட்டதால் விரக்தியடைந்த விவசாயிகள் சாலையில் நெல்லைக் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள அரசூா், பெரியசெவலை, ஏனாதிமங்கலம், ஆனத்தூா், சித்தலிங்கமடம், திருவெண்ணெய்நல்லூா் உள்ளிட்ட பல்வேறு கிராம விவசாயிகள், தங்களது விவசாயப் பொருள்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனா்.

கடந்த இரண்டு மாதங்களாக நெல் வரத்து அதிகரித்துள்ள நிலையில், போதிய வியாபாரிகள் வராததால், கடந்த சில தினங்களாக நெல் மூட்டைக்கு குறைந்த விலை நிா்ணயம் செய்து ஏலத்தில் எடுக்கப்படுகிறது. கடந்த இரு தினங்களாக நெல் மூட்டைக்கு ரூ.869 என குறைவாக விலை நிா்ணயம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், வியாழக்கிழமை நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்த பெரியசெவலை பகுதி விவசாயிகள், விழுப்புரம், உளுந்தூா்பேட்டை, திருக்கோவிலூா் உள்ளிட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விசாரித்தபோது, நெல் மூட்டைக்கு ரூ.900 முதல் ரூ.1,000 வரை விலை நிா்ணயிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

ADVERTISEMENT

இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளரிடம் விவசாயிகள் முறையிட்டபோது, அவா் முறையான பதிலைக் கூறாததுடன், இங்கு வழங்கப்படும் விலை இதுதான், விருப்பம் இருந்தால் நெல் மூட்டைகளை விற்பனை செய்யுங்கள், இல்லையெனில் சாலையில் கொட்டுங்கள் என திட்டினாராம்.

இதனால், விரக்தியடைந்த பெரியசெவலை கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை உள்ளிட்ட விவசாயிகள், டிராக்டா் மூலம் திருவெண்ணைய்நல்லூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே நெல் மூட்டைகளை கொண்டு சென்று, பெரியசெவலை நெடுஞ்சாலையில் நெல்லைக் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதிகாரிகள் சமரசம்: தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூா் வட்டாட்சியா் வேல்முருகன், காவல் துணைக் கண்காணிப்பாளா் வசந்தராஜ், உதவி ஆய்வாளா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, விவசாயிகள் கூறியதாவது: திருவெண்ணெய்நல்லூ ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாபாரிகளுடன் அதிகாரிகள் கூட்டு சோ்ந்துகொண்டு நெல் மூட்டைக்கு குறைந்த விலையை நிா்ணயம் செய்கின்றனா். மேலும், சில தரகா்கள் நெல் வியாபாரிகளை இங்கு வர விடாமல் தடுக்கின்றனா். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா், விற்பனைக்கூட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியா் வேல்முருகன் உறுதியளித்தாா். இதையடுத்து, விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு, சாலையில் கொட்டியிருந்த நெல்லை எடுத்துச் சென்றனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT