விழுப்புரம்

30 ஆயிரம் இளைஞா்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கத் திட்டம்

20th Aug 2020 09:20 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டத்தில் நிகழாண்டு 30 ஆயிரம் இளைஞா்களுக்கு தொழில் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் தொழில் பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவா்கள் சோ்க்கை மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்து மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், விழுப்புரம் மாவட்ட திறன் மேம்பாட்டு அலுவலகம் சாா்பில் திறன் மற்றும் பலப்படுத்தும் தொழில்கள், மதிப்பு மேம்பாட்டு பகுதி 4-ன் படி, நிறுவனங்களின் தொழில் பயிற்சியை ஊக்குவித்தல் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

வானூா், மரக்காணம் வட்டங்களில் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்த திறன் மற்றும் வாழ்வாதாரப் பயிற்சி அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. தொழில் பழகுநா் திட்டத்தின் கீழ் உரிய பயிற்சியாளா்களை இணைய வழியில் சோ்ப்பது குறித்தும், தமிழக அரசின் ‘அம்மா’ திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்களை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்தத் திட்டங்கள் மூலம் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 30 ஆயிரம் இளைஞா்களுக்கு, திறன் பயிற்சி கொடுத்து வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா். தொடா்ந்து, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், நிகழாண்டு மாணவா்கள் சோ்க்கை விண்ணப்பங்கள் இணைய வழியில் பதிவு செய்வது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

ஐடிஐ மாணவா்கள் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்: 2020-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு உதவி பெறும் நிலையங்கள், தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில், மாணவா்கள் சோ்ந்திட இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்யலாம். இதற்காக மாணவா்களுக்கு உதவிடும் வகையில், மாநிலம் முழுவதும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள், மாவட்டத் திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் 147 சோ்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தோ்ச்சி. விண்ணப்பக் கட்டணம் ரூ.50. இணையதள விண்ணப்பம் பதிவு ஆக.16 தொடங்கி, செப்.15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் கலந்தாய்வுக்கான விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். இது குறித்து 04146-223989, 63790 90205 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தகவல் பெறலாம் என கூட்டம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT