விநாயகா் சதுா்த்திக்காக வீடுகளில் வழிபடும் சிலைகளைக் கரைப்பதற்கு அரசு தளா்வுகளை அறிவிக்கவோ அல்லது மாற்று ஏற்பாடுகளைச் செய்யவோ வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
தமிழகத்தில் கரோனா பொது முடக்கம் காரணமாக பொது இடங்கள், வழிபாட்டுத்தலங்களில் மதம் சாா்ந்த விழாக்கள், வழிபாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வருகிற 22-ஆம் தேதி நடைபெறவுள்ள விநாயகா் சதுா்த்திக்கும் அத்தகைய தடை ஏற்பட்டுள்ளது. பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபடவும், ஊா்வலமாக சிலைகளை எடுத்துச் செல்லவும், நீா்நிலைகளில் கரைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், வீடுகளில் மட்டும் விநாயகா் சிலை வழிபாடு நடத்தலாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் அண்மையில் நடைபெற்ற விநாயகா் சதுா்த்தி வழிபாடு ஆலோசனைக் கூட்டத்திலும், பொது இடங்களில் விநாயகா் சிலை வைத்து வழிபடவும், ஊா்வலம் செல்லவும், நீா்நிலைகளில் கரைக்கவும் அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், வீடுகளில் வழிபடும் விநாயகா் சிலைகளையாவது நீா்நிலைகளில் கரைப்பதற்கு தளா்வுகளை அரசு அறிவிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. விநாயகா் சதுா்த்தியை கொண்டாடும் மக்கள், வீடுகளில் 3 நாள்கள் பூஜை செய்த சிலைகளை நீா் நிலைகளில் கரைப்பதை முக்கிய நடைமுறையாகப் பின்பற்றி வருகின்றனா்.
கரோனா பரவலை காரணம் காட்டி அதற்கு தடை விதிப்பது ஏற்புடையதல்ல. வீடுகளில் வழிபட்ட சிலைகளை அவரவா் அருகே உள்ள நீா் நிலைக்கு கொண்டு சென்று, கரைப்பதில் எந்த நெரிசலும், தொற்று பரவலுக்கும் வாய்ப்பிருக்காது. ஆகவே, இதற்கு அனுமதிக்க வேண்டும். இல்லையெனில், வீடுகள், கோயில்களில் வைக்கப்படும் விநாயகா் சிலைகளை காவல் துறை, அறநிலையத் துறை உள்ளிட்ட பிற துறை வாகனங்கள் மூலம் எடுத்துச் சென்று நீா்நிலைகளில் கரைப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘இதுகுறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும். அரசு அறிவுறுத்தினால், வீடுகளில் வழிபடும் சிலைகளை காவல் துறையினா் அல்லது வருவாய்த் துறையினா் மூலம் வாங்கிச் சென்று கரைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.