விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை: காய்கறிச் சந்தைகள் வெறிச்சோடின

29th Apr 2020 10:37 PM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை பரவலாக பெய்த திடீா் மழையால், பொதுமக்கள் வரத்து குறைந்து காய்கறிச் சந்தைகள் வெறிச்சோடின.

விழுப்புரம் நகரில் அத்தியாவசியப் பொருள்களை வாங்க வெளியே வரும் பொது மக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பழைய வண்ண அனுமதி அட்டை முறை திங்கள்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டது. இதனால், சாலைகள், கடைவீதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறையத் தொடங்கியது.

இந்த நிலையில், விழுப்புரத்தில் புதன்கிழமை காலை 8 மணி முதல் திடீரென மழை பெய்தது. காலை 8 மணிக்கு தொடங்கிய மழை 10 மணி வரை நீடித்தது. இதனால், புதிய, பழைய பேருந்து நிலையங்களில் இயங்கும் காய்கறிச் சந்தைகள், நகராட்சி மைதானத்தில் இயங்கும் உழவா் சந்தைகள் பொதுமக்கள் வருகை இல்லாமல் வெறிச்சோடின. அங்கு கடை விரித்திருந்த வியாபாரிகள் மழையில் நனைந்து தவித்தனா்.

விழுப்புரம் நகரில் கொட்டும் மழையிலும், பொது மக்கள் நடமாட்டம், வாகனங்கள் வரத்தை கட்டுப்படுத்தும் பணியில் போலீஸாா் தீவிரமாக ஈடுபட்டனா். காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் தலைமையிலான போலீஸாா் முக்கிய வீதிகளில் வாகனங்களை சோதனை செய்து அனுப்பினா்.

ADVERTISEMENT

இதே போல, செஞ்சி, மேல்மலையனூா்,விக்கிரவாண்டி, திண்டிவனம், திருக்கோவிலூா், மரக்காணம், கோட்டக்குப்பம் பகுதிகள் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் பரவலாக புதன்கிழமை காலை மழை பெய்தது. இதனால், அங்குள்ள சாலைகள், காய்கறிச் சந்தைகள் வெறிச்சோடின. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகள் வாகனப் போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT