விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பத்திரப் பதிவு அலுவலகங்கள் திங்கள்கிழமை முதல் திறக்கப்பட்டன. எனினும், பொதுமக்கள் வராததால் அந்த அலுவலகங்கள் வெறிச்சோடிக் கிடந்தன.
ஊரடங்கு தளா்வு காரணமாக, தமிழகத்தில் பத்திரப் பதிவுத் துறை ஏப்.20 முதல் இயங்குவதற்கு அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் பேரில், விழுப்புரம் மாவட்டத்தில் பத்திரப் பதிவுத் துறை திங்கள்கிழமை முதல் இயங்கியது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பதிவுத் துறை அலுவலகம், விழுப்புரம், திண்டிவனம், கண்டமங்கலம், வளவனூா், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் இணை, துணை பதிவாளா் அலுவலகங்களும் திறக்கப்பட்டன.
இந்த அலுவலகங்களில் இணை, துணை பதிவாளா்கள் மற்றும் குறைந்தளவு ஊழியா்கள் பணிக்கு வந்திருந்தனா். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அலுவலகங்கள் திறந்திருந்தும் பொது மக்கள் வரத்தின்றி அவை வெறிச்சோடி காணப்பட்டன. சில அலுவலகங்களில் பத்திரப் பதிவு குறித்த தகவல் பெறுவதற்காக சிலா் வந்திருந்தனா். முத்திரைத்தாள் விற்பனை சில இடங்களில் நடைபெற்றது.