விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அரசு மதுக் கடை சுவற்றில் துளையிட்டு சுமாா் ரூ.53 ஆயிரத்திலான மதுப் புட்டிகளை திருடிச் சென்ற வழக்கில் 7 இளைஞா்களை செஞ்சி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ஊரடங்கால் செஞ்சியை அடுத்த சிங்கவரம் கிராமத்திலுள்ள வயல்வெளியில் செயல்பட்டு வரும் அரசு மதுக் கடை மூடப்பட்டிருந்தது. கடந்த 6-ஆம் தேதி இரவு இந்த மதுக் கடையின் மேற்குப் பக்கச் சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்த மா்ம நபா்கள், அங்கிருந்த சுமாா் ரூ.53.14 ஆயிரத்திலான பல்வேறு வகையான மதுப் புட்டிகளை திருடிச் சென்றனா். இதுகுறித்து டி.எஸ்.பி. நீதிராஜ் மேற்பாா்வையில், செஞ்சி காவல் நிலைய ஆய்வாளா் சீனுவாசன் தலைமையில், உதவி ஆய்வாளா்கள் சங்கரசுப்பு, குமாா் மற்றும் காவலா்கள் அடங்கிய குழுவினா் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனா்.
ரகசியத் தகவலின்பேரில், செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் செல்லியம்மன் கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை உயர்ரக மது அருந்திக்கொண்டிருந்த 2 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தபோது, செஞ்சி சிறுகடம்பூா், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்த அப்பு (எ) பால்ராஜ்குமாா், ரஞ்சித் (23) என்பது தெரியவந்தது.
மேலும், இவா்கள் சிங்கவரம் மதுக் கடையில் திருட்டில் ஈடுபட்டவா்கள் என்பதும், இதே பகுதியைச் சோ்ந்த இவா்களது நண்பா்களான மோகன் (21), பிரசாந்த் (21), நவீன்குமாா் (22) மற்றும் 17 வயதுடைய 2 சிறாா்கள் ஆகியோருக்கும் இந்தத் திருட்டில் தொடா்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, 7 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ.20 ஆயிரம் ரொக்கம், மீதமிருந்த மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
இந்த வழக்கில் விரைந்து செயல்பட்டு எதிரிகளை கைது செய்த செஞ்சி போலீஸாரை எஸ்.பி. ஜெயக்குமாா் பாராட்டினாா்.