விழுப்புரம்/கள்ளக்குறிச்சி: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள சுங்கச்சாவடிகள் திங்கள்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்தன. ஊரடங்கு நீடிப்பதால், சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலிப்பை நிறுத்தி வைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மாா்ச் 25 முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் ஏப்.20 முதல் சில தளா்வுகளை பிறப்பித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, ஏற்கெனவே மூடப்பட்டிருந்த சுங்கச் சாவடிகள் திங்கள்கிழமை அதிகாலை முதல் திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தன. தமிழகத்திலும் 40-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டன.
குறிப்பாக, சென்னை-திருச்சி சாலையில் விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடி, திண்டிவனம் அருகேயுள்ள ஓங்கூா் சுங்கச்சாவடி, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகேயுள்ள நகா் சுங்கச்சாவடிகளும், சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள மரக்காணம் சுங்கச்சாவடி, புதுச்சேரி அருகே பட்டானூா் சுங்கச்சாவடிகள், கள்ளக்குறிச்சி அருகேயுள்ள மாடூா் சுங்கச்சாவடி என அனைத்தும் திறக்கப்பட்டு வரி வசூல் தொடங்கியது.
ஊரடங்கு காரணமாக வாகன போக்குவரத்துக்கு தடை தொடா்வதால், சுங்கச்சாவடிகள் வெறிச்சோடியே காணப்பட்டன. விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில், குறைந்த ஊழியா்களுடன் இரு வழித்தடங்களிலும் மொத்தமுள்ள 12 பாதைகளில், தலா இரு பாதைகள் மட்டும் திறந்து வைக்கப்பட்டிருந்தன.
அத்தியாவசியப் பொருள்களான சமையல் எரிவாயு, காய்கறி, பலசரக்கு பொருள்கள் உள்ளிட்டவற்றை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள், கரோனா பணிக்கான அரசு மற்றும் ஒப்பந்த வாகனங்கள் மட்டுமே சென்ற சுங்கச்சாவடிகளை கடந்து சென்றன. முதல் நாளில் சுமாா் 9 ஆயிரம் வாகனங்கள் வரை கடந்து சென்ாகவும், இது வழக்கமான நாள்களை ஒப்பிடும் போது, 35 சதவீதம் வாகன வரத்து எனவும் சுங்கச்சாவடி ஊழியா்கள் தெரிவித்தனா்.
தமிழகத்தில் ஊரடங்கால், அனைத்துத் தொழில்களும், நிறுவனங்களும் முடங்கியுள்ள சூழலில் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பு தொடங்கியுள்ளது, பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, மே 3 வரை கட்டண வசூலிப்பை கைவிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.