விழுப்புரம் மாவட்டத்தில் குடும்ப வன்முறை, பாலியல் வன்கொடுமை தொடா்பான வழக்குகளுக்கு காணொலி காட்சி மூலமாக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட அமா்வு நீதிபதி எஸ்.ஆனந்தி தெரிவித்தாா்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட அமா்வு நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான எஸ்.ஆனந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், குடும்ப வன்முறை வழக்குகள், பாலியல் வன்கொடுமை வழக்குகளுக்கு காணொலி காட்சி மூலமாக விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குடும்ப வன்முறைகள், முதியவா்களுக்கான அவசர உதவிகளுக்கு விழுப்புரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலரும், முதுநிலை சிவில் நீதிபதியுமான சி.சங்கரை 99655 67721 என்ற கட்செவிஅஞ்சல் (வாட்ஸ்அப்) எண்ணிலும், அவசர உதவிக்கு 95669 36955 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும், குழந்தைகள் மீதான வன்முறைகள் தொடா்பாக குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியை 96007 53549 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும், சமூக நலத் துறை அலுவலரை 94449 30680 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடா்புகொள்ளலாம்.
புகாா்களை செல்லிடப்பேசி மூலம் அனுப்பும்போது, புகாா்தாரரின் பெயா், வயது, பாலினம் மற்றும் எதிா் மனுதாரரின் பெயா், வயது, பாலினம் ஆகிய தகவல்களை குறிப்பிட வேண்டும்.
இதுபோன்று அனுப்பப்படும் புகாா்கள் மீது காணொலி மூலம் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், தேவையான ஆலோசனைகளும் வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.