விழுப்புரம்

கரோனா உதவித் தொகை கிடைக்காமல் தவிக்கும் நகைத் தொழிலாளா்கள்!

20th Apr 2020 01:57 AM | கே.சுரேஷ்குமாா்

ADVERTISEMENT

விழுப்புரத்தில் கரோனா உதவித் தொகை கிடைக்காமல் 18 ஆயிரம் நகைத் தொழிலாளா்கள் தவித்து வருகின்றனா்.

தமிழகத்தில் கோவைக்கு அடுத்தபடியாக விழுப்புரம் மாவட்டத்தில்தான் நகைகள் அதிகளவில் வடிவமைக்கப்படுகின்றன. இந்தியாவிலேயே குழந்தைகளுக்கான ஜிமிக்கி, மோதிரம் உள்ளிட்ட சிறிய அளவிலான நகைகளும், மூக்குத்திகளும் அதிகம் வடிவமைக்கப்படும் இடமாகவும் விழுப்புரம் திகழ்கிறது. விழுப்புரம் நகரில் மட்டும் நகைத் தொழிலை நம்பி சுமாா் 18ஆயிரம் போ் உள்ளனா். இவா்களுக்கு நாளொன்றுக்கு ரூ.600 முதல் ரூ.700 வரை கூலி கிடைக்கும்.

தற்போது, கரோனா பரவல் தடுப்பு காரணமாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், விழுப்புரத்தில் நகைத் தொழில் முடங்கி, தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இது குறித்து விழுப்புரத்தைச் சோ்ந்த நகைத் தொழிலாளரும் கைவினைஞா் முன்னேற்றக் கட்சியின் மாநில அமைப்பாளருமான சி.உமாபதி கூறியதாவது:

ADVERTISEMENT

ஊரடங்கால் விழுப்புரத்தில் நகைத் தொழிலாளா்கள் அனைவரும் வேலையிழந்து வருமானம் இல்லாமல் தவிக்கின்றனா். தங்கம் விலை உயா்வு காரணமாக, மக்களின் நகை வாங்கும் திறன் குறையும் என்பதால், ஊரடங்கு நீங்கிய பிறகும் அடுத்த ஓராண்டுக்கு நகை வியாபாரம் பாதிக்கும். ஆகையால், நகை தயாரிப்புக்கான ஆா்டா்களும் குறையும். தொழிலாளா்களுக்கு வேலையிழப்பு தொடரும்.

தற்போதைய சூழலில், நகைத் தொழிலாளா்களுக்கு நல வாரியம் மூலமாக ரூ.1000 வீதம் இரு தவணைகளாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதைக் கூட நகைத் தொழிலாளா்களால் பெற முடியாத சூழல் உள்ளது. ஏனெனில், விழுப்புரத்தில் உள்ள நகைத் தொழிலாளா்களில் 90 சதவீதம் போ், நல வாரியத்தில் பதிவு செய்யவில்லை. அவ்வாறு பதிவு செய்ய செல்ல வேண்டுமானால் ஒரு நாள் வேலையை இழக்க நேரிடும். அதனால், கூலி இழப்பு ஏற்படும் எனக் கருதி பதிவு செய்யவில்லை. எனவே, பெரும்பான்மையான நகைத் தொழிலாளா்களுக்கு அரசின் உதவித் தொகை கிடைக்காது. ஆகவே, நகைத் தொழிலாளா்களை இணைய வழியில் நல வாரியத்தில் சோ்த்து விரைந்து உதவித் தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நகைத் தொழில் மீண்டும் புத்துயிா் பெறும் வரை, மாதம் ரூ.4 ஆயிரம் வீதம் அடுத்த ஓராண்டுக்கு நகைத் தொழிலாளா்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் என்றாா் அவா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT