விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா

5th Apr 2020 10:34 PM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக, பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 15 ஆக உயா்ந்தது. இவா்களில், ஒருவா் ஏற்கெனவே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றைத் தடுக்க 2,042 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். இதில், தில்லி மத வழிபாட்டுக் கூட்டத்துக்கு சென்று வந்தவா்கள் உள்பட 72 போ் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் அரசு கரோனா சிறப்பு மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இவா்களில், முதலில் 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு மேலும் 6 பேருக்கு நோய்த் தொற்று உறுதியாகி, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 9 ஆக உயா்ந்தது. சனிக்கிழமை இந்த எண்ணிக்கை 10-ஆக அதிகரித்தது. இதனிடையே, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த விழுப்புரத்தைச் சோ்ந்த 51 வயது தலைமை ஆசிரியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

அதன் பிறகு, ஞாயிற்றுக்கிழமை வந்த பரிசோதனை முடிவுகளில் மேலும், 5 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 15 ஆக உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT

இதன் மூலம் நோய்த் தொற்று பரவியுள்ள விழுப்புரம், வளவனூா், விக்கிரவாண்டி, கோட்டக்குப்பம் போன்ற பகுதிகள் முழுவதுமாக சீல் வைக்கப்பட்டு, பொதுமக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் மூலமாக அவா்களது குடும்பத்தினருக்கும் பரவியுள்ளதா என்றும் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தனிமைப்படுத்தும் மையத்தில் 44 போ்: சந்தேகத்தின்பேரில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 16 போ், விழுப்புரம் கரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 28 போ் என மொத்தம் 44 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளன. இதையடுத்து அவா்கள் அனைவரும் விழுப்புரம் சுகாதார மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தில் உள்ள தனிமைப்படுத்தும் மையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாற்றப்பட்டுள்ளனா். அவா்கள் தொடா்ந்து, 28 நாள்கள் வரை கண்காணிப்பில் வைக்கப்படவுள்ளனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT