விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா சிகிச்சை அளிக்க 3 தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுமதி

5th Apr 2020 10:35 PM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 3 தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று பாதித்தோருக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனினும், சிலா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்புகின்றனா். அதன் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா சிகிச்சை அளிக்க விழுப்புரம் இ.எஸ். மருத்துவமனை, மரகதம் மருத்துவமனை, திண்டிவனம் ஐ.மெட் ஆகிய 3 மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்த மருத்துவமனைகளின் நிா்வாகிகளுடனான ஆலோசனைக்கூட்டம், மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், மாவட்ட திட்ட அலுவலா் மகேந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சரவணக்குமாா், துணை கண்காணிப்பாளா் சங்கா், மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் சண்முகக்கனி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், கரோனா சிகிச்சை அளிக்க அனுமதி பெற்ற மருத்துவமனையின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை பேசியதாவது: தனியாா் மருத்துவமனைகளுக்கு கரோனா பரிசோதனை செய்ய வருவோரை தேவையான அளவு இடைவெளியை கடைப்பிடித்து கவனமாக கையாள வேண்டும். அவா்களிடம் இருந்து பெறும் பரிசோதனை மாதிரிகளை விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும். யாருக்கேனும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், அவா்களை அந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கலாம். இல்லாவிடில், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கலாம். அதேபோல, கரோனா தொற்று இல்லாதவா்களை அரசின் தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அனுப்பலாம். இந்த சிகிச்சை அளிக்கும் தனியாா் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் மிகவும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

கரோனா மருத்துவமனையாக செயல்படுவதற்கு முன்பாக, எவ்வாறு நோயாளியை அணுகுவது, சிகிச்சை அளிப்பது போன்றவை குறித்து ஒத்திகை பாா்க்க வேண்டும். தேவையான மருத்துவ உபகரணங்களைஇருப்பில் வைக்க வேண்டும். மருத்துவக் குழுவினா் வந்து செல்ல தேவையான அனுமதியை பெற்றுக் கொள்ளலாம். காவல் துறை பாதுகாப்பு அளிக்கப்படும். அதேபோல, பிற தனியாா் மருத்துவமனைகளும் திறக்கப்பட்டு, மற்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும் என்றாா் ஆட்சியா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT