விழுப்புரம்

தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு முதல் இடைத் தேர்தலை சந்திக்கிறது விக்கிரவாண்டி

22nd Sep 2019 12:59 AM

ADVERTISEMENT


தமிழகத்தில் தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு உருவான விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதியில், முதல் முறையாக இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தொகுதியில் சம பலத்துடன் உள்ள அதிமுக, திமுக கட்சிகளே மீண்டும் களமிறங்குகின்றன.
விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி, தமிழகத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு உருவானது. விழுப்புரம் தொகுதிக்கு அருகே அமைந்துள்ள இந்தத் தொகுதியில், கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடைபெற்றது. இதில், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆர்.ராமமூர்த்தி 78,656 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் கு.ராதாமணி, 63,759 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
2016-இல் நடைபெற்ற தேர்தலில், திமுக வேட்பாளர் கு.ராதாமணி 63,757 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் ஆர்.வேலு 56,845 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இதில், பாமக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், நாம் தமிழர், 9 சுயேச்சைகள் உள்ளிட்ட 17 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 
இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் திமுக எம்எல்ஏ கு.ராதாமணி உடல்நலக் குறைவால் இறந்து போனதால், இந்தத் தொகுதிக்கு முதல் முறையாக இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, வருகிற அக்.21-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. 
2.23 லட்சம் வாக்காளர்கள்: விக்கிரவாண்டி தொகுதியில், 1,11,607 ஆண், 1,11,546 பெண்,  25 திருநங்கைகள்,  ராணுவத்தினர் 209 பேர் என மொத்தம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 387 வாக்காளர்கள் உள்ளனர்.  275 வாக்குச் சாவடிகள் உள்ளன. அவற்றில் 24 பதற்றமான வாக்குச் சாவடிகள். 
தொகுதி சீரமைப்புக்கு முன்பு...: ஏற்கெனவே தொகுதி சீரமைப்புக்கு முன்பு, இந்தத் தொகுதியின் பகுதிகளை உள்ளடக்கியதாக, கண்டமங்கலம் சட்டப் பேரவைத் தொகுதி இருந்தது.  அதில், கடந்த 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த எம்.ராமன் வெற்றி பெற்றார். காங்கிரஸைச் சேர்ந்த எஸ்.சரஸ்வதி தோல்வியடைந்தார்.  1971-இல் மீண்டும் திமுக-எம்.ராமன் வெற்றி பெற்றார்.  காங்கிரஸ்- பி.மாதவன் தோல்வியடைந்தார். 1977-இல் அதிமுக-கண்ணன் வெற்றி பெற்றார்.  திமுக- அழகுவேல் தோல்வியடைந்தார். 1980-இல் மீண்டும் அதிமுக-கண்ணன் வெற்றி பெற்றார். காங்கிரஸ்-பி.மாதவன் தோல்வியடைந்தார்.
1984-இல் அதிமுக-வி.சுப்பிரமணியன் வெற்றி பெற்றார். திமுக-எஸ்.அழகுவேல் தோல்வியடைந்தார். 1989-இல் தனித்தொகுதியாக மாறி நடைபெற்ற தேர்தலில், திமுக-அழகுவேல் வெற்றி பெற்றார். அதிமுக (ஜானகி அணி) கண்ணன் தோல்வியடைந்தார். 1991-இல் அதிமுக-வி.சுப்பிரமணியன் வெற்றி பெற்றார். திமுக-அழகுவேல் தோல்வியடைந்தார். 1996-இல் மீண்டும் திமுக-அழகுவேல் வெற்றி பெற்றார். அதிமுக-சுப்பிரமணியன் தோல்வியடைந்தார்.
மீண்டும் 2001-இல் அதிமுக-சுப்பிரமணியன் வெற்றி பெற்றார். திமுக-இ.விஜயராகவன் தோல்வியடைந்தார். கண்டமங்கலம் தொகுதியில் இறுதியாக 2006-இல் நடைபெற்ற தேர்தலில் திமுக செ.புஷ்பராஜ் வெற்றி பெற்றார். அதிமுக-சுப்பிரமணியன் தோல்வியடைந்தார்.
சம பலத்தில் அதிமுக-திமுக: கண்டமங்கலம் தொகுதியாக இருந்தபோது, திமுக 5 முறையும், அதிமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2008-இல் தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு,  விக்கிரவாண்டி பொது தொகுதியாக அறிவிக்கப்பட்ட பிறகு, அதிமுக (கூட்டணி), திமுக தலா ஒரு முறை வெற்றி பெற்றன.  
இந்தத் தொகுதியில் திராவிடக் கட்சிகள் தலா 6 முறை வெற்றி பெற்று, சமநிலையில் உள்ளன.  நடைபெற்ற அனைத்து சட்டப் பேரவைத் தேர்தல்களிலும்,  ஆட்சியை பிடிக்கும் கட்சியின் வேட்பாளரே இத்தொகுதியில் வெற்றி பெற்று வந்துள்ளனர். கடந்த தேர்தலின் போது மட்டும் அதிமுக ஆட்சியை பிடித்த நிலையில், இத்தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இடைத் தேர்தலில் இரு கூட்டணி கட்சிகள் தரப்பிலும் பிற கட்சிகள் வாய்ப்பு கோராத நிலையில், மீண்டும் அதிமுக, திமுக கட்சிகளே நேரடியாக தேர்தல் களம் காணுகின்றன. வேட்பாளரை தேர்வு செய்யாத நிலையில், இரு கட்சியினரும்,  கடந்த மாதத்திலிருந்தே தீவிர தேர்தல் பணியைத் தொடங்கியுள்ளனர்.
முதல் முறையாக...: கடந்த 1952-இல் விக்கிரவாண்டி தொகுதியாக அறிமுகமாகி நடைபெற்ற முதல் தேர்தலில் உழைப்பாளர் கட்சி சார்பில் ஏ.கோவிந்தசாமி வெற்றி பெற்றார். தொடர்ந்து, இத்தொகுதி வளவனூர் தொகுதியாக மாறி, பின்னர் அதிலிருந்து கண்டமங்கலம், முகையூர் தொகுதிகள் பிரிக்கப்பட்டன. 1967-இல் முகையூர் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் ஏ.கோவிந்தசாமி திமுக சார்பில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார்.
 அவர் கடந்த 1969-இல் இறந்த பிறகு நடைபெற்ற இடைத் தேர்தலில், அவரது மனைவி பத்மாவதி போட்டியிட்டு வெற்றி பெற்றார். 50 ஆண்டுகளுக்குப் பிறகு, இத்தொகுதியில் மீண்டும் இடைத் தேர்தல் வருகிறது. 
எனினும், தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு முதல் முறையாக இடைத் தேர்தலை விக்கிரவாண்டி தொகுதி சந்திக்கிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT