விழுப்புரம் மாவட்டத்தில் விதிகளை மீறி இயங்கியதாக 18 மதுபானக் கூடங்களுக்கு டாஸ்மாக் அதிகாரிகள் குழுவினர் சனிக்கிழமை சீல் வைத்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு அருகே விதிகளை மீறி மதுபானக் கூடங்கள் பல இடங்களில் செயல்பட்டு வந்தன. இந்த நிலையில், விழுப்புரம் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் குமார் தலைமையில், துணை மேலாளர் பாக்யராஜ் மற்றும் மது விலக்கு காவல் துறையினருடன் 5 தனிப்படைகள் அமைத்து, திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, டாஸ்மாக் கடைகள் அருகே மது அருந்தும் வகையில் அனுமதியின்றி இயங்கிய மதுபானக் கூடங்களை கண்டறிந்து சீல் வைத்தனர். அந்த வகையில், சங்கராபுரம் பகுதியில் 3, திண்டிவனம் பகுதியில் 3, கள்ளக்குறிச்சியில் 4, மேல்மலையனூர் பகுதியில் 8 என மொத்தம் 18 போலி மதுபானக் கூடங்களை மூடி சீல் வைத்தனர்.
மேலும், 4 பெட்டிக்கடைகளும் மூடப்பட்டன. இதன் மூலம் 22 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, வழக்குப் பதியப்பட்டுள்ளதாக டாஸ்மாக் மேலாளர் குமார் தெரிவித்தார். ஆய்வின்போது, வட்டாட்சியர்கள் சற்குணம், ஜோதிவேல், ஆனந்தகுமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.