மின் வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக, ரூ.23 லட்சம் மோசடி செய்ததாக, ஒருவர் மீது விழுப்புரம் மாவட்ட போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
விழுப்புரம், நாராயணா நகரைச் சேர்ந்தவர் கணேசன் (55). இவர் தனது சொந்த ஊரான திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்த வெங்கட்ராஜ் மகன் கிருபாசங்கர் என்பவரை அண்மையில் சந்தித்தார். அப்போது, அவரிடம் கிருபாசங்கர், தான் சென்னை தலைமைச் செயலகத்தில் பணிபுரிவதாக அறிமுகப்படுத்தியதுடன், யாருக்காவது அரசு வேலை வேண்டுமானால் பணம் கொடுத்தால் வாங்கித்தருவதாகக் கூறினாராம். இதை நம்பி, அவரிடம் கணேசன் தனது மகன் ராகுலுக்கு மின் வாரியத்தில் அரசு வேலை வாங்கித் தரக் கேட்டு ரூ.23 லட்சத்து 22 ஆயிரத்தை கொடுத்தாராம். ஆனால், உறுதியளித்தபடி கிருபாசங்கர் வேலை வாங்கித் தரவில்லையாம். பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லையாம். இதனால், ஏமாற்றம் அடைந்த கணேசன், இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் செய்துள்ளார். தற்போது திருச்சியில் வசித்து வரும் கிருபாசங்கர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் குமார் தலைமையிலான போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.