விழுப்புரம்

விழுப்புரத்தில் அரசுப் பேருந்து ஜப்தி

17th Sep 2019 10:30 AM

ADVERTISEMENT

ஆசிரியருக்கு விபத்து இழப்பீடு வழங்காததால், விழுப்புரத்தில் அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் திங்கள்கிழமை ஜப்தி செய்தனர்.
விழுப்புரம், மூவேந்தர் நகரைச் சேர்ந்தவர் கஜேந்திரன்(55). அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். இவர், கடந்த 18.3.2014 அன்று, கடலூருக்குச் செல்ல விழுப்புரம், சிக்னல் அருகே போக்குவரத்து காவல் நிலையம் முன் அரசுப் பேருந்து ஒன்றில் ஏறினார். ஆனால், கஜேந்திரன் ஏறுவதை கவனிக்காமல், பேருந்து புறப்பட்டதால், அவர் தவறி விழுந்து இடுப்பில் காயமடைந்தார்.
இதையடுத்து, விபத்து இழப்பீடு கோரி கஜேந்திரன் விழுப்புரம் மோட்டார் வாகன வழக்குகள் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் (2) வழக்குத் தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிபதி உத்தமராஜ், பாதிக்கப்பட்ட கஜேந்திரனுக்கு விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகம் ரூ.3,70,100 வழங்க கடந்த 12.3.2018-இல் உத்தரவிட்டார். எனினும், இழப்பீடு வழங்கப்படவில்லை.
இதையடுத்து, கஜேந்திரனுக்கு வட்டியுடன் சேர்த்து இழப்பீடுத் தொகையாக ரூ.5,20,466-ஐ விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகம் வழங்கவும், குறித்த காலத்துக்குள் வழங்கவில்லையெனில் பேருந்தை ஜப்தி செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 
நீதிமன்றம் உத்தரவிட்டும் இழப்பீடு வழங்கப்படவில்லை. இதையடுத்து, விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் கடலூருக்குச் செல்ல புறப்படத் தயாராக இருந்த அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் திங்கள்கிழமை ஜப்தி செய்து, விழுப்புரம் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT