திண்டிவனம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு காய்கறி வியாபாரி, அவரது மனைவியை கத்தி முனையில் மிரட்டி பணத்தை பறித்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திண்டிவனம் அருகே ஆசூரைச் சேர்ந்தவர் குமரேசன் (46), காய்கறி வியாபாரி. இவர், ஞாயிற்றுக்கிழமை திருமண்ணாமலையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவுக்கு சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு பேருந்தில் திரும்பிக்கொண்டிருந்தார். தீவனூர் வந்திறங்கிய அவர், அங்கு ஏற்கெனவே நிறுத்தி வைத்திருந்த தனது இரு சக்கர வாகனத்தில் ஆசூரை நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆசூர் கூட்டுப்பாதையில் வந்தபோது, திடீரென வழிமறித்த அடையாளம் தெரியாத 6 பேர், கத்தியை காட்டி குமரேசனை மிரட்டி, ரூ.1,200-ஐ பறித்தனர். தொடர்ந்து, குமரேசனை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று, அவரது மனைவியிடமும் பணத்தைக் கேட்டு மிரட்டினர். அவர் வீட்டில் இருந்து ரூ.5 ஆயிரத்தை எடுத்துக் கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த மர்ம நபர்கள் தப்பிவிட்டனர்.
இது குறித்த புகாரின்பேரில், வெள்ளிமேடுபேட்டை போலீஸார் விசாரிக்கின்றனர்.