விழுப்புரம்

விழுப்புரத்தில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

10th Sep 2019 10:16 AM

ADVERTISEMENT

விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் திங்கள்கிழமை அதிரடியாக அகற்றப்பட்டன.
விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலை (என்.எச்.45ஏ)  ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலை விரிவாக்கப் பணிகள், இரு புறமும் கால்வாய் அமைக்கும் பணிகள் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் கடந்த ஓராண்டாக  நடைபெற்று வருகின்றன. எனினும், இந்த சாலையோரம் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த சிறிய வழிபாட்டுத் தலங்களை அகற்ற அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இப்பணி நீண்டகாலமாக கிடப்பில் கிடந்தது. இருப்பினும், சாலையை ஆக்கிரமித்திருந்த பாலமுருகன் கோயில், புனித அன்னை ஆலயம்,  ராஜகணபதி கோயில், பாணம்பட்டு சாலை சந்திப்பில் உள்ள அம்மன் கோயில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களை அகற்றுவதற்கு தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் நோட்டீஸ் வழங்கி வந்தனர். 
இறுதிகட்ட வாய்ப்பாக, கடந்த வாரம் ஏழாவது முறையாக நோட்டீஸ் வழங்கி, அந்த வழிபாட்டுத் தலங்களிலும் ஒட்டினர். தேசிய நெடுஞ்சாலை, போக்குவரத்துக்கு இடையூறான ஆக்கிரமிப்பு அகற்றுதல் சட்டம் 
2002-ன் படி,  உடனடியாக அகற்றப்படும் என்று எச்சரித்திருந்தனர்.
இந்த நிலையில், திங்கள்கிழமை கிழக்கு பாண்டி சாலையில் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் அம்பிகா தலைமையில், விழுப்புரம் வட்டாட்சியர் கணேஷ் முன்னிலையில்,  பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது. துணை காவல் கண்காணிப்பாளர் வி.வி.திருமால் தலைமையில் போலீஸார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனர். பாலமுருகன் கோயிலை அகற்ற முயன்றபோது, பாஜக, அதிமுக, திமுக பிரமுகர்கள், அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற வழங்கிய நீண்டகால அவகாசம் முடிந்துவிட்டதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்து, கோயில் மின் வயரை துண்டித்தனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கோயில் தரப்பில் 3 நாள்கள் அவகாசம் கோரியதற்கு, அதிகாரிகள் அனுமதி வழங்கினர். 
இதையடுத்து, அருகே கிறிஸ்தவ கல்லறை எதிரே உள்ள இரு சிறிய தேவாலய கட்டடங்களை அகற்றச் சென்றனர். 
அவர்கள் ஒரு நாள் அவகாசம் கோரினர். எனினும், அதிலிருந்த மாதா சிலைகளை அவர்கள் அப்புறப்படுத்தி விட்டு, அனுமதித்ததால், அந்த இரு ஆலயங்களும் இடித்து அகற்றப்பட்டன. 
தொடர்ந்து, மாதா கோயில் எதிரே இருந்த சிறிய ராஜ கணபதி கோயிலும், பானாம்பட்டு சாலை சந்திப்பு அருகே இருந்த சிறிய அம்மன் கோயிலும் இடித்து அகற்றினர்.
இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: 
விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, 16 மீட்டர் அளவில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுகின்றன. நகரப் பகுதியில் இதனை 100 அடி  சாலையாக மாற்றும் வகையில், இடத்துக்கேற்ப சிமென்ட் சாலை, தார் சாலைகள், கால்வாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. 
தொடர்ச்சியாக, கோலியனூர், வளவனூர், கண்டமங்கலம் வரை நடைபெறும் என்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT