விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் வட்டாரத்தை கள்ளக்குறிச்சியுடன் இணைக்க எதிர்ப்பு

10th Sep 2019 10:18 AM

ADVERTISEMENT

விழுப்புரம் அருகே உள்ள திருவெண்ணெய்நல்லூர் வட்டாரத்தை கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அனைத்துக் கட்சிகள் சார்பில் அரசூரில் கையெழுத்து இயக்கப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தை வட்டமாக அறிவிக்க வேண்டும், விழுப்புரத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவுக்குள்பட்ட பகுதிகளை கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைப்பதை விடுத்து, விழுப்புரம் மாவட்டத்திலேயே தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விழுப்புரம் இணைப்புக் குழு சார்பில் கையெழுத்து இயக்கப் போராட்டம் அரசூர் கூட்டுச் சாலையில் நடைபெற்றது. 
தேமுதிக மாவட்டச் செயலர் எல்.வெங்கடேசன் கையெழுத்திட்டு, போராட்டத்தை தொடக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: 
திருவெண்ணெய்நல்லூரை வட்டமாக அறிவிக்கவும், 
விழுப்புரம் அருகேயுள்ள திருவெண்ணெய்நல்லூர், முகையூர், அரசூர் மடப்பட்டு, சித்தலிங்கமடம் பகுதிகளை விழுப்புரம் மாவட்டத்துடன் தொடர வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர். புதிய மாவட்டத்துடன் இணைத்தால், இப் பகுதி மக்கள் 100 கி.மீ. தொலைவிலுள்ள கள்ளக்குறிச்சி சென்று வருவது சிரமம். ஆகவே, அந்தந்த பகுதி மக்களின் கருத்தை கேட்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலர் ரங்கதாஸ், திமுக ஒன்றிய இலக்கிய அணிச் செயலர் வெங்கடகிருஷ்ணன், தேமுதிக ஒன்றியச் செயலர்கள் ராமச்சந்திரன், ஏழுமலை, நகரச் செயலர் முருகன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலர் மணிகண்டன், விசிக ஒன்றியச் செயலர்கள் வடிவேல், இளவரசு, 
விழுப்புரம் இணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் தர்மா, அருள்புத்தர், சத்தியமூர்த்தி, இந்து முன்னணி மாவட்டச் செயலர் சிவா,  அமமுக மாவட்டத் தலைவர் முத்துரங்கன் உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டு கையெழுத்திட்டு, கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT