விழுப்புரம்

காட்டுஎடையார் கிராமத்தில் மதுக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

10th Sep 2019 10:18 AM

ADVERTISEMENT

உளுந்தூர்பேட்டை அருகே காட்டுஎடையார் கிராமத்தில் பொது மக்களுக்கு  இடையூறாக இயங்கி வரும் டாஸ்மாக் மதுக் கடையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
உளுந்தூர்பேட்டை அருகே காட்டு எடையார் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் தலைமையில் கிராம சேவைக் குழுவினர் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்துக் கூறியதாவது: 
காட்டுஎடையார் ஊராட்சிக்குள்பட்ட பாளையம்-காட்டுஎடையார் இடையே உள்ள பேருந்து நிறுத்தம் பகுதியில், டாஸ்மாக் மதுக் கடை கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் காரணமாக மது போதையால் அந்தப் பகுதியில் கடந்த இரு ஆண்டுகளில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் ஐந்து பேர் வரை உயிரிழந்தனர். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மதுப் பிரியர்களால் மாணவ, மாணவிகள், பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
இந்த மதுக்கடை அருகே ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்கு சென்று வரும் பக்தர்களும் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். மதுக் கடை அருகே ஏரி பாசன வசதியுடன் கூடிய விளைநிலங்களில் பலர் மது அருந்திவிட்டு,  மதுப் புட்டிகளையும், நெகிழிப் பைகளையும் வீசிச் செல்கின்றனர். அந்த டாஸ்மாக் மதுக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என  கிராம சபைக் கூட்டத்திலும் தீர்மானம் போட்டு,  கோரிக்கை வைத்துள்ளோம். ஆகவே, அந்த மதுக்கடையை அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT