விழுப்புரம்

திருக்கோவிலூர் அருகே போலி மருத்துவர்கள் இருவர் கைது

7th Sep 2019 08:46 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உரிய கல்வித் தகுதி இன்றி ஆங்கில வழி மருத்துவச் சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர்கள் இருவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
திருக்கோவிலூர் அருகே பகண்டை கூட்டுச் சாலையில் போலி மருத்துவர்கள் மருத்துவச் சிகிச்சை அளிப்பதாக, மாவட்ட சுகாதாரத் துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, இணை இயக்குநர் சண்முக கனி உள்ளிட்ட சுகாதாரத் துறை குழுவினர் வெள்ளிக்கிழமை பகண்டை கூட்டுச் சாலை பகுதிக்குச் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு, பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த, அருங்குருக்கைபுதூரைச் சேர்ந்த ஆருண்யா (24), அவரது கணவர் கோவிந்தன்(25) ஆகிய இருவரும் கிளினிக் நடத்தி, ஆங்கில வழி மருத்துவச் சிகிச்சை அளிப்பதும்,  சிறப்பு மருத்துவமாக உடல் எடை குறைப்பு, குழந்தையின்மை ஆகியவற்றுக்கு தரமற்ற மருந்துகளை வழங்கி வருவதும் தெரிய வந்தது.
இந்த கிளினிக்கில், குழந்தையின்மைக்கு சிகிச்சை எடுத்து, மருந்து சாப்பிட்ட பெண் ஒருவர், உடல்நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் தெரிய வந்தது. இதே போல, பலர் பாதிக்கப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
இது குறித்து இணை இயக்குநர் சண்முகாகனி பகண்டை கூட்டுச்சாலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலி மருத்துவர்களான ஆருண்யா,  கோவிந்தன், அவர்களுக்கு உடந்தையாக, மற்றொரு போலி மருத்துவரான  அதே பகுதியைச் சேர்ந்த கண்ணையன் மகன் தமிழ்பாலன் ( 24) ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். 
இவர்களில் கோவிந்தன், தமிழ்பாலன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். 
கிளினிக்கில் இருந்த மருந்துப் பொருள்கள்,  மருத்துவ உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆருண்யா தலைமறைவானார்.
மக்கள் ஏமாற வேண்டாம்: 
இது குறித்து இணை இயக்குநர் சண்முக கனி கூறியதாவது: 
கிளினிக்கில் ஆய்வு செய்யும்போதே ஒரு தம்பதி சிகிச்சைக்கு வந்தனர். 
அவர்களிடம் குழந்தையின்மைக்கு  சிகிச்சை அளிப்பதாக, ரூ.38 ஆயிரம் பெற்றுக்கொண்டு மருந்து வழங்கி வந்தது தெரிந்தது. 
இவர்கள் வழங்கிய மருந்துகள் அரசால் தடை செய்யப்பட்டவை. ஏராளமான தரமற்ற மருந்துகளையும் இருப்பு வைத்துள்ளனர். 
இது போன்ற போலி மருத்துவ மையங்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்றார் அவர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT