விழுப்புரம்

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய புதிய செயலி: ஆட்சியர் அறிவுரை

4th Sep 2019 10:03 AM

ADVERTISEMENT

வாக்காளர் சரிபார்ப்புத் திட்ட புதிய செயலி வாயிலாக நேரடியாக திருத்தம் செய்து, குறைகளில்லா வாக்காளர் பட்டியலை ஏற்படுத்த வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
விழுப்புரம் மாவட்ட வாக்காளர் சரிபார்ப்பு புதிய செயலிக்கான திட்டத்தை, விழுப்புரம் ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது: 
தேர்தல் ஆணையம் மூலம் வாக்காளர் சரிபார்ப்புத் திட்டம் செப்.1 முதல் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி, வாக்காளர்கள் தாமாகவே வாக்காளர் பட்டியலில் உள்ள தங்களது பெயர், முகவரி, வயது, புகைப்படம் மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளலாம். 
இதற்காக வாக்காளர் உதவி மைய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய விரும்பும் நபர், அவரது வாக்காளர் அட்டையின் மின்னணு எண்ணை (எபிக் நம்பர்) உள்ளீடு செய்து, மேற்கண்ட அனைத்து விதமான திருத்தங்களையும் மேற்கொள்ளலாம். திருத்தம் செய்வதற்கு ஆதரமாக, அவரது ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், கடவுச் சீட்டு, வங்கிப் புத்தகம் உள்ளிட்ட ஏதேனும் ஒன்றை ஸ்கேன் செய்து உறுதிப்படுத்த வேண்டும்.  இந்த செயலி வழியாக நீங்கள் திருத்தம் செய்துவிட்டால் போதும். 
அடுத்ததாக, வாக்குச்சாவடி அலுவலர்கள், அந்த திருத்தத்துக்கான நகலை எடுத்துக்கொண்டு உங்கள் வசிப்பிடம் தேடி வந்து, ஆய்வு செய்து உறுதி செய்வர். தேர்தல் ஆணையத்தின் நேஷ்னல் வோட்டர்ஸ் சர்வீஸ் போர்ட்டல் இணையதளம் வழியாகவும் இதே திருத்தங்களை மேற்கொள்ளலாம். 
திருத்தங்களை மேற்கொள்வதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், இ-சேவை மையங்களிலும் வசதி செய்யப்பட்டுள்ளது.  இந்த மையங்களில் நேரில் சென்றும், வாக்காளர்கள் திருத்தம் செய்ய முடியும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வாக்காளர்களின் பெயர்கள், பட்டியலில் பல இடங்களில் மாறியுள்ளதையும் மாற்றி, ஒரே பாகத்தில் வரும் வகையில், வரிசையாக திருத்தம் செய்து அமைக்க முடியும்.  
இந்தப் பணிகள் செப்.30ஆம் தேதி வரை ஒரு மாதம் நடைபெறும். இதன் பிறகு, அக்.15-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். தொடர்ந்து,  நவ.30-ஆம் தேதி வரை சுருக்க திருத்தப் பணிகள் நடைபெறும்.  நவ.2, நவ.3 ஆம் தேதி மற்றும் நவ.9, நவ.10-ஆம் தேதிகளில், வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்கள் நடைபெறும்.  
இதனை மக்கள் பயன்படுத்திக்கொண்டு, மாவட்டத்தில் 
குறைபாடுகள் இல்லாத முழுமையான வாக்காளர் பட்டியல் அமைய ஒத்துழைக்க வேண்டும் என்றார். 
வீட்டு எண்களில் குளறுபடி- கட்சிகள் புகார்: கூட்டத்தில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பேசுகையில், விழுப்புரம் நகரம் முழுவதும் வீட்டுக் கதவு எண்கள் முறையாக எழுதப்படவில்லை. 
இதற்காக ஸ்டிக்கர் ஒட்டி வரும் தனியார் ஒப்பந்தக்காரர்களும் சரியான முகவரியில் ஒட்டாமல் கிடப்பில் வைத்துள்ளனர். வாடகை வீடுகள் மாறும் வாக்காளர்களுக்கு பல இடங்களில் வாக்குரிமை உள்ளதை நீக்க வேண்டும் என்று புகார் தெரிவித்தனர். ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பிரபாகரன்,  கட்சிப் பிரதிநிதிகளாக திமுக மாவட்டப் பொருளர் நா.புகழேந்தி, அதிமுக நகரச் செயலர் ஜி.பாஸ்கரன்,  காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆர்.பி.ரமேஷ், பாஜக மாவட்டச் செயலர் வி.சுகுமாரன், தேமுதிக நகரச் செயலர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சேவை மையம் தொடக்கம்
விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வாக்காளர் சரிபார்க்கும் திட்டத்தின் கீழ் வாக்காளர் சேவை மையம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. இந்த மையத்தை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் திறந்து வைத்து, வாக்காளர் திருத்தப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். 
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) 
வீ.பிரபாகர், விழுப்புரம் கோட்டாட்சியர் க.ராஜேந்திரன், விழுப்புரம் வட்டாட்சியர் த.பிரபுவெங்கடேஸ்வரன்,  தேர்தல் வட்டாட்சியர் வெ.சீனுவாசன்,  வருவாய் ஆய்வாளர் சாதிக் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.தொடர்ந்து, ஒரு மாத காலம் இயங்கும் இந்த மையத்தில்,  விழுப்புரம்,  வானூர்,  விக்கிரவாண்டி வட்ட வாக்காளர் பட்டியலில், பொது மக்கள் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT