விழுப்புரம்

நீர்நிலைகள் வறண்டதால் சிலைகளை கரைப்பதில் சிக்கல்! குட்டை அமைத்து கரைக்க ஏற்பாடு

4th Sep 2019 10:00 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி பகுதியில் நிகழாண்டு மழை பொய்த்து, நீர் நிலைகள் வறண்டதால், விநாயகர் சிலைகளைக் கரைப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது. இதனால், கச்சிராயப்பாளையம் ஏரியில் குட்டை அமைத்து, அதில் சிலைகளைக் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி பகுதியில் நிகழாண்டு விநாயகர் சதுர்த்தி சிலை வழிபாடு எதிர்பார்த்த அளவுக்கு களைகட்டவில்லை. 
சிலை வடிவம், வழிபாடு, ஊர்வலம், அனுமதி போன்றவை தொடர்பாக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.
 இதனால், சிலை வழிபாடு குறித்த ஆர்வம் மக்களிடம் குறைந்ததால், சிலைகள் விற்பனையும் சரிந்தது. 
கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சி காவல் கோட்டத்துக்கு உள்பட்ட கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கீழ்க்குப்பம், கச்சிராயப்பாளையம், கரியாலூர், தியாகதுருகம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 390 சிலைகள் வழிபாட்டுக்கு வைக்கப்பட்ட நிலையில், நிகழாண்டு 290 சிலைகளே நிறுவப்பட்டுள்ளன. கரியாலூரில் கடந்த ஆண்டு 7 சிலைகள் வழிபாட்டுக்கு வைத்த நிலையில், நிகழாண்டு சிலைகளே வைக்கவில்லை. 
இந்த நிலையில், வழிபாட்டுக்கு வைத்த சிலைகளை கரைப்பதிலும் சிக்கல் எழுந்துள்ளது.
 கடந்த இரு ஆண்டுகளாக கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலைப் பகுதிகளில் மழை பெய்யவில்லை. இதனால் நீர் நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. 
கோமுகி அணை ஆற்று வாய்க்காலில் சுமார் 5 அடி அளவும், மணிமுக்தா அணை ஷட்டர் பகுதியில் சிறிதளவும், சின்னசேலம் ஏரியில் குட்டைபோலவும் தண்ணீர் தேங்கியுள்ளது. எனினும், அவற்றில் சிலைகளை கரைக்க முடியாத நிலை உள்ளது. 
எனவே, சின்னசேலம் ஏரி குட்டை அருகில்  5அடி ஆழம்,  12 அடி அகலம்,  17 அடி நீளத்துக்கு பள்ளம் வெட்டி, குட்டை போல அமைத்து, அதில் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
இந்தப் பணியை சின்னசேலம் வட்டாட்சியர் சு.இந்திரா செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT