விழுப்புரம்

உளுந்தூர்பேட்டை அருகே இரு பிரிவினரிடையே மோதல்: விநாயகர் சிலை சேதம்

4th Sep 2019 10:04 AM

ADVERTISEMENT

உளுந்தூர்பேட்டை அருகே செவ்வாய்க்கிழமை இரு பிரிவினரிடையே ஏற்பட்ட தகராறில், விநாயகர் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
உளுந்தூர்பேட்டையை அடுத்த திருநாவலூர் பகுதியில் பெரும்பட்டு, பா.கிள்ளனூர் ஆகிய கிராமங்கள் அருகருகே அமைந்துள்ளன. 
சதுர்த்தியையொட்டி, பா.கிள்ளனூர் காலனியில் விநாயகர் சிலையை நிறுவ, அப்பகுதியினர் ஆரவாரத்துடன் கொண்டு செல்லும்போது, பின்னால் வந்த வாகனங்களுக்கு வழிவிடவில்லை என பெரும்பட்டு கிராமத்தினர் கூறினராம். இதனால், இரு கிராமத்தினரிடையே தகராறு ஏற்பட்டது. 
இதன் தொடர்ச்சியாக, செவ்வாய்க்கிழமை மாலை பெரும்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் பா.கிள்ளனூர் காலனிக்குச் சென்று அந்த பிரச்னை குறித்து பேசியதாகத் தெரிகிறது. இதனால், மீண்டும் தகராறு ஏற்பட்டு இரு தரப்பினரும் தாக்கிக்கொண்டனர். 
இதில், கிள்ளனூரைச் சேர்ந்த தினேஷ், பெரும்பட்டைச் சேர்ந்த ஆனந்த் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இருவரும், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 
இதனிடையே, தகராறின்போது, பா.கிள்ளனூர் காலனியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை உடைத்து சேதப்படுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து, உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. பாலச்சந்தர் தலைமையிலான போலீஸார் பா.கிள்ளனூர் பகுதிக்கு விரைந்து சென்று விசாரித்தனர். மேலும், அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். சேதப்படுத்தப்பட்ட விநாயகர் சிலைக்கு பதிலாக புதிய சிலை வைக்க காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT