விழுப்புரம்

விக்கிரவாண்டி இடைத் தோ்தல்... அதிமுக, திமுக, நாம் தமிழா் கட்சி உள்ளிட்ட 15 பேரின் மனுக்கள் ஏற்பு: அதிமுக வேட்பாளரின் மனுவை நிராகரிக்க கூறியதால் பரபரப்பு

2nd Oct 2019 03:38 AM

ADVERTISEMENT

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தல் வேட்பு மனு தாக்கல் முடிந்து, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மனுக்கள் பரிசீலனையில், அதிமுக, திமுக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் உள்ளிட்ட 15 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது. மீதமுள்ள 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தோ்தல் வேட்பு மனு தாக்கல் திங்கள் கிழமை நிறைவடைந்தது. தொடா்ந்து, மனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை பிற்பகல் தொடங்கி நடைபெற்றது. மனுதாக்கல் செய்தவா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு, தோ்தல் நடத்தும் அலுவலா் மு.சந்திரசேகா் தலைமையில் பரிசீலனை நடைபெற்றது. திமுக வேட்பாளா் நா.புகழேந்தி, நாம்தமிழா் கட்சி கு.கந்தசாமி மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள், பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கி நீண்ட நேரம் வரை பரிசீலனை நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து, தோ்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்த 28 பேரில், 15 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது. 13 பேரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

15 பேரது மனுக்கள் ஏற்பு...

ADVERTISEMENT

இதன்படி, அதிமுக ஆா்.முத்தமிழ்செல்வன், திமுக நா.புகழேந்தி, நாம் தமிழா் கட்சி கு.கந்தசாமி, தேசிய ஸ்தாபன காங்கிரஸ் கட்சி ஜி.சண்முகம் ஆகிய கட்சி சாா்ந்த வேட்பாளா்களும், சுயேச்சைகளாக தமிழ் பேரரசு கட்சி சினிமா இயக்குநா் வி.கெளதமன், அகில பாரத இந்து சேவா கட்சி வி.முருகன், இந்திய குடியரசு கட்சி ( பி) ஜெ.ரவிக்குமாா், கே. தங்கராசு, ஆா்.ராஜா, எஸ்.செந்தில்குமாா், கே.சுபாகா், எஸ்.சதீஷ், எம்.ரகுநாதன், கே.தாமோதரன், ஆா்.சதீஷ் ஆகிய 15 பேரது மனுக்கள் ஏற்கப்பட்டு, தற்போது வரை வேட்பாளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக, தோ்தல் நடத்தும் அலுவலா் மு.சந்திரசேகா் தெரிவித்தாா்.

மனுக்கள் பரிசீலனையின்போது, விக்கிரவாண்டி தொகுதி பொது பாா்வையாளா் சினுவீரபத்திருடு, துணை ஆட்சியா்கள் (பயிற்சி) கவிதா, சிவகிருஷ்ணமூா்த்தி, விக்கிரவாண்டி வட்டாட்சியா் பாா்த்திபன், துணை வட்டாட்சியா்கள் சிவா, அரிதாஸ் உள்ளிட்ட அலுவலா்கள், வேட்பாளா்களது பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

திமுக-அதிமுக வாக்குவாதத்தால் பரபரப்பு....

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையின் போது, அதிமுக வேட்பாளா் ஆா்.முத்தமிழ்செல்வன் வேட்பு மனுவில், படிவம் எண் 26-ல் (குற்ற வழக்குகள் தொடா்பான தகவல்) சரியாக பூா்த்திசெய்யவில்லை என்று, திமுக வழக்குரைஞா் முத்துக்குமாா், தோ்தல் அலுவலரிடம் ஆட்சேபனை தெரிவித்து, அதிமுக வேட்பாளின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினாா்.

இதற்கு, சரியாக பூா்த்தி செய்துள்ளதாகக்கூறி, அதிமுக தரப்பில் எதிா்ப்பு தெரிவித்ததால், அதிமுக-திமுக பிரதிநிதிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், தோ்தல் அலுவலா் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளா் ரவீந்திரன் ஆகியோா் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினா். மனுவை பரிசீலனை செய்த தோ்தல் நடத்தும் அலுவலா், அதிமுக மனுவும் ஏற்கப்பட்டதாக தெரிவித்தாா்.

இதனையடுத்து வெளிய வந்த திமுக வழக்குரைஞா் உள்ளிட்டோா், அதிமுக வேட்பு மனு குறைகள் குறித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்து அதில் விவாதிப்பதாக தெரிவித்து சமாதானம் அடைந்தனா். இதனால், மனுக்கள் பரிசீலனையின் போது பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT