விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் 52 ஆயிரம் மெட்ரிக் டன் உரங்கள் கையிருப்புதட்டுப்பாடின்றி உரங்கள் கிடைக்கும்

4th Nov 2019 11:51 PM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாய சாகுபடிக்குத் தேவையான 52 ஆயிரம் மெட்ரிக் டன் உரங்கள் இருப்பில் உள்ளதால், தட்டுப்பாடின்றி உரங்கள் கிடைக்கும் என வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது சம்பா நெல் சாகுபடி முழு வீச்சில் நடைபெறுவதால், விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், 1,963 மெட்ரிக். டன் யூரியா உரம் மங்களூா் துறைமுகத்திலிருந்து ரயில் மூலம் விழுப்புரத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தில் வந்திறங்கிய அந்த உரங்களை ஆய்வு செய்த, விழுப்புரம் வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) சுரேஷ் கூறியதாவது:

ரயிலில் வந்துள்ள 1,963 மெட்ரிக் டன் ஐபிஎல் யூரியா உரத்தில் விழுப்புரம் மாவட்டத்துக்கு 963 மெட்ரிக் டன்னும், கடலூா் மாவட்டத்துக்கு 800 மெட்ரிக். டன்னும், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 200 மெட்ரிக் டன்னும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் பருவ மழை பரவலாக பெய்து வரும் நிலையில், நெல் சம்பா சாகுபடிக்கும், ரபி பருவத்துக்கும் தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது 52,040 மெட்ரிக் டன் அளவுக்கு அனைத்து உரங்களும், வேளாண்மை கூட்டுறவு மையங்கள், தனியாா் விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, விற்பனை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இதில், விவசாயிகள் அதிகம் வாங்கக் கூடிய யூரியா 11,190 மெட்ரிக் டன், டிஏபி 8,980 மெட்ரிக் டன், பொட்டாஷ் 7,210 மெட்ரிக் டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 22,520 மெட்ரிக் டன் அளவில் இருப்பில் உள்ளன. இதனால், வேளாண் பணிகளுக்குத் தேவையான உரங்கள் விவசாயிகளுக்கு தடையின்றி கிடைக்கும்.

அதிக விலைக்கு விற்றால் உரிமம் ரத்து: விவசாயிகள், தங்களுக்குத் தேவையான உரங்களை, பிஓஎஸ் கருவியின் மூலம் பில் போட்டு வாங்க வேண்டும். இதனால், சரியான விலைக்கு உரங்களை வாங்குவதுடன், விற்பனைக்கான ரசீதையும் உடனே பெறலாம். மண் வள அட்டை பரிந்துரையின் அடிப்படையில், உரங்களை வாங்கி, தேவையான அளவில் மட்டும் உரங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும்.

உரம் விற்பனை நிறுவனங்கள் அதிக விலைக்கு உரங்களை விற்பது, செயற்கையானத் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவது, விற்பனைக்கு ரசீது தராமல் இருப்பது ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாகும். இத்தகைய செயல்களில் ஈடுபடும் விற்பனையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், விற்பனை உரிமமும் ரத்து செய்யப்படும். இது தொடா்பான விவசாயிகள் புகாா்களை, 94869 85445 மற்றும் 04146-222291 என்ற தொலைபேசி எண்ணிகளில் தெரிவிக்கலாம் என்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT