விழுப்புரம்

9 மாணவிகளுக்காக இலவச போக்குவரத்து வசதி

29th Jun 2019 09:24 AM

ADVERTISEMENT

செஞ்சி அருகே 9 நரிக்குறவ சமுதாய மாணவிகள் பள்ளி சென்று வர ஏதுவாக, ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் மூலம் இலவச போக்குவரத்து வசதியை கல்வித் துறை ஏற்படுத்தித் தந்துள்ளது.
செஞ்சி-திண்டிவனம் சாலையில்  களையூர் கூட்டுச் சாலை அருகே அண்ணாநகர் குடியிருப்பு உள்ளது. இங்கு முப்பதுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாய குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கிருந்து 9 மாணவிகள் கடம்பூரில் உள்ள அரசுப் பள்ளியில் பயில்கின்றனர். இவர்களுக்கு போக்குவரத்து வசதி இல்லை. இதனால், மாணவிகள் பள்ளிக்கு வருவதற்கு பெரும் சிரமமடைந்து வந்தனர்.
இந்த நிலையில், இந்த பள்ளியின் ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் நரிக்குறவர் மாணவிகளை அழைத்து வந்தனர். மேலும், இதுகுறித்து கல்வித் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்  மூலம் இலவச போக்குவரத்து வசதி தற்போது ஏற்படுத்தி தரப்பட்டது. ஆட்டோ மூலம் தினமும் காலை மாலை இரு வேளைகளும் இந்த மாணவிகளை ஆட்டோவில் இலவச பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான செலவை கல்வித் துறை ஏற்றுக்கொள்ளும்.
இலவச போக்குவரத்து வசதியை செஞ்சி கல்வி மாவட்ட அலுவலர் ரோஸ் நிர்மலா வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.  வட்டாரக் கல்வி அலுவலர் மு.இரவி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆ.இரவி(பொ), தலைமை ஆசிரியர் வெங்கடேசன், ஆசிரியர் பயிற்றுநர்கள் ஜெயராமன், சாந்தி, சித்ரா, கனிமொழி, யமுனாதேவி, சல்சா, பாரதி, சுந்தரமூர்த்தி, வெங்கடேசன், ஆசிரியர் பன்னீர்செல்வம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT