விக்கிரவாண்டியில் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்காக, ஏரியில் அமைந்துள்ள பழைமையான கிணற்றை பேரூராட்சி சார்பில் தூர்வாரி சீரமைக்கும் பணிகள் நடைபெற்றன.
விக்கிரவாண்டி பெரிய ஏரிப் பகுதியில் பழங்காலக் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணறு மூலம், அருகே உள்ள பெரிய காலனி பகுதி மக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.
தற்போது, மழையின்றி கடும் வறட்சி நிலவுவதால், அந்த கிணற்றின் நீராதாரத்திலிருந்து, மோட்டார் மூலம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டுமே தண்ணீர் விநியோகம் நடைபெறுகிறது.
எனினும், கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் இந்த கிணற்றை தூர்வாரி சீரமைக்க வேண்டும், அதன் மூலம் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்று, அப்பகுதி மக்கள் பேரூராட்சிக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன் பேரில், விக்கிரவாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் செல்லப்பிள்ளை கிணற்றை பார்வையிட்டு, அதை தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுத்தார். இதற்காக, பொது நிதியிலிருந்து ரூ.ஒரு லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கிணற்றை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனையொட்டி, பேரூராட்சி சார்பில் தூர்வாரும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
தொடர்ந்து, வெள்ளிக்கிழமையும் தொழிலாளர்கள் கிணற்றிலிருந்த மண் மேடுகளையும், குப்பைகளையும் அகற்றி தூர்வாரி சீரமைத்தனர். 2 அடி ஆழம் அளவில் தூர்வாரிய போது, கிணற்றில் நீர் ஊற்றெடுத்ததால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தொடர்ந்து, கிணற்றை தூர்வாரி, தண்ணீரை சுத்தப்படுத்தும் பணிகள் பேரூராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பணிகள் முடிந்து, கிணற்றின் மேல் பாதுகாப்பு இரும்பு வளையம் அமைக்கவும், ஆழ்துளைக் கிணறு அமைத்து இதிலிருந்து தடையின்றி
குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.