திருக்கோவிலூர் அருகே தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் நீர்நிலை புறம்போக்கில் உள்ள வீடுகளுக்கு பட்டா வழங்கக் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
திருக்கோவிலூர் அருகே தாசர்புரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 30-க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரத்துக்கு திரண்டு வந்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது:
திருக்கோவிலூர் அருகேயுள்ள தாசர்புரத்தில் நீர்நிலை புறம்போக்கில் பல ஆண்டுகளாக குடிசை வீடுகள் கட்டி வாழ்ந்து வருகிறோம். இந்த நிலையில், எங்கள் வீடுகளை அகற்றப்போவதாகவும், முன்னதாக வீடுகளை காலி செய்யக் கூறியும் நோட்டீஸ் வந்துள்ளது. நாங்கள் வீட்டு வரி, குடிநீர் வரி, மின்சாரக் கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்தி வருகிறோம். மேலும்,
அரசுக்கு அபராதத் தீர்வையும் செலுத்தியுள்ளோம்.
நீர்நிலை புறம்போக்கில் வசித்து வரும் ஏழை மக்களின் வீடுகளை அகற்ற நினைப்பது மனிதநேயமற்ற செயலாகும். அறியாமையால் இந்த இடத்தில் வாழும் அப்பாவி மக்களுக்கு வாழ வழி செய்ய வேண்டும். நாங்கள் வாழும் இடத்துக்கு பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.