தியாகதுருகம் திருக்குறள் பேரவை சார்பில், பேரவையின் 16-ஆம் ஆண்டு தொடக்க விழா, காமராஜர் பிறந்த நாள் விழா, முத்து விழா ஆகிய முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய பெண்கள் தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை பொதுச் செயலர் பாவலர் கு.சீத்தா தலைமை வகித்தார்.
தியாகதுருகம் அரசு ஆண்கள் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் க.நாகம்மாள், முன்னாள் எம்.எல்.ஏ. ம.கோமுகி மணியன், பேரவைத் தலைவர் பொன்.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் தி.வெங்கடாசலபதி வரவேற்றார்.
பேரவை புரவலர் கு.பாலசுப்பிரமணியன் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்புத் தலைவர் பா.கோ.நாராயணசாமி தொடக்க உரையாற்றினார். புலவர் அய்யா.
மோகன் திருவள்ளுவர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, குறளும் அறமும் குறித்து பேசினார். வள்ளுவரும் வள்ளலாரும் பற்றி குறள்மாமணி ரூபி.ரெசினா, காமராஜர் குறித்து சிவனடிமை செல்வம் ஆகியோர் பேசினர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் எம்.எல்.ஏ.
ம.கோமுகி மணியன் பரிசு, சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார். 1330 திருக்குறள்களை ஒப்பித்த அரசுப் பள்ளி மாணவி மா.தேன்மொழிக்கு எழுத்தாளர் ஆறுமுகம் ரூ.1,500 ரொக்கப் பரிசு வழங்கினார். கவிஞர் அரங்க மின்னல், வா.ச.கணேசன், முத்தமிழ் முத்தன், சண்முகம் பிச்சப்பிள்ளை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.