விழுப்புரம்

திண்டிவனத்தில்  நெல் வியாபாரியை கடத்த முயற்சி

30th Jul 2019 10:06 AM

ADVERTISEMENT

திண்டிவனத்தைச் சேர்ந்த நெல் வியாபாரியை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் திங்கள்கிழமை கடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டிவனத்தை அடுத்த மேல்பேரடி குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஈசாயத் மகன் ரஹமத்துல்லா (51) . நெல் வியபாரியான இவர், திண்டிவனம் சந்தைமேடு பகுதியில் அலுவலகம் வைத்து 20 ஆண்டுகளாக நெல் வியாபாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், ஆந்திர மாநிலத்திலிருந்து 2 கார்களில் திண்டிவனத்துக்கு திங்கள்கிழமை வந்த அடையாளம் தெரியாத 13 பேர், சந்தைமேடு அலுவலகத்தில் இருந்த ரஹமத்துல்லாவை காரில் கடத்த முயன்றனராம். இதனால் அவர் கூச்சலிட்டதால், அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டனர்.
அப்போது, பொதுமக்களுக்கும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதனிடையே, அந்த 
வழியாக வந்த போக்குவரத்து போலீஸார், இதுகுறித்து ரோசணை போலீஸாருக்கு 
தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரோசணை போலீஸார், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களையும், ரஹமத்துல்லாவையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில், ஆந்திர மாநிலம் கடப்பாவை அடுத்துள்ள சென்னூர் பகுதியைச் சேர்ந்த பிரமையாவுக்கும், ரஹமதுல்லாவுக்கும் இடையே நெல் வியாபாரம் தொடர்பாக பணப் பிரச்னை இருந்துள்ளது. 
நெல் வாங்கியதற்கு பணத்தை தராமல் ரஹமத்துல்லா ஏமாற்றி வந்ததால், பிரமையா ஆந்திரத்தில் உள்ள சென்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனால், ரஹமத்துல்லாவை பிடித்துச் செல்ல ஆந்திர போலீஸார் அவர்களுடன் சில ஆள்களை அழைத்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து ரஹமத்துல்லாவிடம் ரோசணை போலீஸார் விசாரித்தபோது, ஆந்திரத்தில் இருந்து நெல் ஏற்றி வந்த லாரி ஓட்டுநர்களிடமே நெல்லுக்கான பணத்தை அளித்துவிட்டதாகத் தெரிவித்தார். இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT