விழுப்புரம்

பூரண மது விலக்கை வலியுறுத்திகுமரி அனந்தன் சுற்றுப்பயணம்: ஓமந்தூரார் நினைவிடத்திலிருந்து தொடக்கம்

27th Jul 2019 10:20 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் பூரண மது விலக்கை வலியுறுத்தி, காந்தி பேரவைத் தலைவரும் காங்கிரஸின் மூத்தத் தலைவருமான குமரி அனந்தன் முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் மணிமண்டபத்திலிருந்து வெள்ளிக்கிழமை விழிப்புணர்வு சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார்.
முன்னதாக, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள ஓமந்தூருக்கு வந்த குமரி அனந்தன் தலைமையிலான குழுவினர், அங்கிருந்து ராமசாமி ரெட்டியார் மணிமண்டபத்தை நோக்கி பேரணியாக நடந்து சென்றனர். அப்போது "பூரண மது விலக்கே எங்கள் இலக்கு', "தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும்' என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியபடி சென்றனர். 
மணிமண்டபத்தை அடைந்ததும், ஓமந்தூரார் சிலைக்கு குமரி அனந்தன் மாலை அணிவித்தார். தமிழகத்தில் முதன் முதலில் மது விலக்கை அமல்படுத்திய அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது. 
பிறகு, அங்கிருந்து அவர்கள் காரில் புறப்பட்டனர்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்டத் தலைவர் ஆர்.பி. ரமேஷ் தலைமையில் நகரத் தலைவர் விநாயகம், முன்னாள் மாவட்டத் தலைவர் ஆறுமுகம், பொருளாளர் கருணாகரன், மாநில பொதுக் குழு உறுப்பினர் இல.கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, திண்டிவனம் வேட்டவராயன், சாத்தனூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் வில்லுப்பாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதல்வர்களான ராஜபாளையத்தில் உள்ள பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் நினைவிடம், தொரப்பள்ளியில் ராஜாஜி நினைவிடம், விருதுநகரில் காமராஜர் நினைவிடம், மீஞ்சூரில் பக்தவச்சலம் நினைவிடம், காஞ்சிபுரத்தில் சி.என்.அண்ணாதுரை நினைவிடம் ஆகிய இடங்களுக்கும் குமரி அனந்தன் தலைமையிலான குழுவினர் சென்று மரியாதை செலுத்தி பயணத்தைத் தொடர்கின்றனர்.
வருகிற அக்.2-ஆம் தேதி காந்தியின் 150-ஆவது பிறந்த நாளில் சென்னையில் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து, பூரண மது விலக்கை வலியுறுத்தி, மனு அளிக்க உள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT