விழுப்புரம்

சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் மேலும் 4 பேர் கைது: ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார்

27th Jul 2019 10:23 AM

ADVERTISEMENT

திண்டிவனம் அருகே இரு சிறுமிகள் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் மேலும் 4 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இந்தச் சம்பவத்தில் அப்பாவிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக, அந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
திண்டிவனம் அருகேயுள்ள தென்நெற்குணம் கிராமத்தில் பாட்டியின் வீட்டில் தங்கி, பள்ளியில் படித்து வந்த, 9 வயது மற்றும் 7 வயது இரு சிறுமிகளை அதே பகுதியைச் சேர்ந்த சிலர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சிறுமிகளின் தாய், குழந்தைகள் பாதுகாப்பு நலக் குழுவினர் அளித்த புகாரின் பேரில், சிறுமிகளின் உறவினர்கள் உள்ளிட்ட 10 பேரை பிரம்மதேசம் போலீஸார் கடந்த வாரம் கைது செய்தனர். இந்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த முருகன்(40),  செல்வம்(37),  துரைசாமி(55), கமலக்கண்ணன்(30)  ஆகிய மேலும் 4 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். 
இந்த சம்பவத்தில் தொடர்பில்லாத அப்பாவிகளை போலீஸார் கைது செய்வதாகக் கூறி, தென்நெற்குணம் கிராம மக்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை புகார் 
மனு அளித்தனர். 
அப்போது அவர்கள் கூறியதாவது:  புதுவையில் வசிக்கும் தங்களது தாய் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில்தான் சிறுமிகள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஆனால், அவர்கள் பாட்டி வீட்டுக்கு திரும்பிய நிலையில், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறி, பிரம்மதேசம் போலீஸார் எங்கள் கிராமத்துக்கு வந்து விசாரித்து இதுவரை 14 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக புதுவையிலும் விசாரிக்க வேண்டும். அதை விடுத்து, தொடர்பில்லாத அப்பாவிகளை போலீஸார் கைது செய்வதால் கிராம மக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் உண்மைக் குற்றவாளிகள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT