விழுப்புரம்

கலிங்கல் இடிப்பு: சாலைப் பணியை தடுத்து நிறுத்திய மக்கள்

27th Jul 2019 10:24 AM

ADVERTISEMENT

திண்டிவனம் அருகே கூட்டேரிப்பட்டில் மயான சாலைப் பணியின் போது, ஏரி நீர்வரத்து கலிங்கல் கட்டமைப்பு உடைக்கப்பட்டதால் பொது மக்கள் பணியை தடுத்து நிறுத்தினர்.
கூட்டேரிப்பட்டில் உள்ள மயானப் பாதை, குண்டும் குழியுமாக இருந்ததால்,  அதைப் புதுப்பித்து சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பாதை அருகே, ஏரியிலிருந்து நீர் வெளியேறும் வகையில் கலிங்கல் அமைக்கப்பட்டிருந்தது. 
தற்போது, புதிய சாலை அமைக்கும் பணியின் போது,  ஏரி நீர் வெளியேறும் கலிங்கல்லை இடித்து  அதிலிருந்த மண், கற்களை மயானப் பாதையில், பயன்பாடு இல்லாமல் அமைத்துள்ள ஒரு சிறு பாலத்துக்குள் கொட்டி ஒப்பந்ததாரர் சமன் செய்துள்ளார்.  மேலும், அந்தச் சாலையில் அமைந்துள்ள சிறு பாலத்தின் ஒரு புறம் அடைக்கப்பட்டும், மறுபுறம் திறந்த நிலையில் நீர் வெளியேற வழியின்றியும் உள்ளது.
இதையறிந்த, அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை நேரில் சென்று சாலைப் பணியை தடுத்து நிறுத்தி,  இடிக்கப்பட்ட இடத்தில் புதிய கலிங்கல் கட்டித் தருமாறு,  ஒப்பந்ததாரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
தகவல் அறிந்த கூட்டேரிப்பட்டு ஊராட்சிச் செயலர் நடராஜன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி,  இடிக்கப்பட்ட கலிங்கல் பழையபடி கட்டித் தர ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். 
ஏரியில் இருந்து  நீர் செல்லும் வரத்து வாய்க்கால் பகுதியில் சிறு பாலம் கட்டாமல், மயானப் பாதையில் கணக்குக்காக தேவையின்றி ஒரு சிறு பாலத்தை அமைத்து,  அரசு நிதியை வீணடித்துள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT