ரயில்வே துறையை தனியாரிடன் ஒப்படைக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கையைத் தடுக்க பெரிய அளவிலான போராட்டங்கள் நடத்தப்படும் என்று, எஸ்.ஆர்.எம்.யூ. தொழில் சங்கத் தலைவர் ராஜா ஸ்ரீதர் கூறினார்.
எஸ்.ஆர்.எம்.யூ. ரயில்வே தொழில் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. சங்க செயல் தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். கோட்டத் தலைவர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார். கோட்டச் செயலர் வீரசேகரன் வரவேற்றார்.
கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் ராஜா ஸ்ரீதர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்தியில் பாஜக தலைமையிலான அரசு மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, ரயில்வே துறையில் அடுத்த 100 நாள்களில் மேற்கொள்ள உள்ள செயல் திட்டங்கள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், சில ரயில்களை தனியாருக்கு அளிப்பது என்றும், அந்த ரயில்களுக்கான கட்டணங்களை தனியாரே முடிவு செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவானது லாபத்தில் இயங்கும் ரயில்வேத் துறையை தனியாருக்கு ஏலம் விடும் செயலாகும். தனியாருக்கு அளிக்கப்படும் ரயில்களில் ரயில்வே தொழிலாளர்கள் பணியில் இருக்க மாட்டார்கள் எனில், இந்த முடிவு தொழிலாளர்களின் பணியைப் பாதிக்கும் வகையில் அமைவதாகும்.
இதுபோன்று தொழிலாளர்களுக்கு விரோதமாக மத்திய அரசு செயல்படுவதும், ரயில்வே துறையை தனியாருக்கு விற்க முயல்வதும் கண்டிக்கத்தக்கது. எனவே, கடந்த 1974-ஆம் ஆண்டில் நடத்தியதுபோல, பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டு, ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையைத் தடுப்போம். மேலும், இதுகுறித்து தொழிலாளிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என்றார் அவர்.
கூட்டத்தில், விருத்தாசலம் சங்கக் கிளைச் செயலர் கணேஷ்குமார், விழுப்புரம் கிளைச் செயலர்கள் வெங்கடேசன், ரகு, திருவண்ணாமலை கிளைச் செயலர் ஏழுமலை உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். கடலூர் கிளைச் செயலர் சுந்தர்ராஜன் நன்றி கூறினார்.